பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


தனியாக எடுத்தார்கள். அப்போது திடீரென்று பகவதிக்குத் தைரியம் வந்து விட்டது. “நானும் படத்தில் நிற்கிறேன்” என்றான். புகைப்படக்காரர் “ஒரே ‘நெகட்டிவ்’ தானிருக்கிறது” என்றார். தம்பி அழ ஆரம்பித்தான். பிறகு அவனைச் சமாதானப் படுத்திக் கையில் மலர்களைக் கொடுத்து, சடலத்தின் பக்கத்தில் நிற்கச் செய்து படமெடுத்தார்கள்.

புலவர்களின் கண்ணிர்

சுவாமிகள் மறைந்த செய்தி நாடெங்கும் அறிவிக்கப் பட்டது. தமிழ் நாட்டில் அப்போது வாழ்ந்த நாடகப் புலவர்களெல்லாம் இரங்கற் பாக்கள் பாடி அனுப்பியிருந்தார்கள். சுவாமிகளோடு நெருங்கிய தோழமை கொண்டவர் உடுமலை சக்தச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர். அவர் சுவாமிகளோடு சக மாணவராகப் பழனி தண்டபாணி சுவாமிகளிடம் பாடம் கேட்டவர். கவிராயர் அவர்கள் அனுப்பியிருந்த இரங்கற் பாக்கள், மனத்தை உருக்குவதாக அமைந்திருந்தன. ஒரு பாட்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

"சுந்தரராவ் முதலாகத் துலங்கணக்தன்
    வரைவகுத்துச் சொல்லுங் காலை
எந்தகா டகத்லைவர் நீயின்றி
    நடனவரங் கேறி நின்றார்?
அந்தமார்க கண்டனுக்கன் றரனளித்த
    வரமுனக்கிண் டருமை யாச்சோ?
சந்தமார் சங்கரதாஸ் சாமிநினை
    யாங்காணும் தருண மென்றே!"

பாவலர் நோட்டிஸ்

பாவலர் கம்பெனியில் நாங்கள் இரண்டரை மாதங்களே இருந்தோம். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் நடிப்புத் துறையில் நாங்கள் பெற்ற பயிற்சி மிகச் சிறப்பானது. அப் பயிற்சி நாடகத் துறையில் முன்னேறுவதற்கு எங்களுக்குப் பெருந்துணையாக இருந்தது என்பதை மகிழ்வோடு குறிப்பிட வேண்டியது என் கடமை.