பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


தில் பணம் திரட்டத் தொடங்கினார். அதனால் கம்பெனிக்கு வருவாய் மேலும் குறைந்தது.

காமேஸ்வர ஐயரின் தில்லுமுல்லுகள்

கம்பெனி மானேஜர் காமேஸ்வர ஐயர், சின்னையாபிள்ளையிடமிருந்து நல்ல நடிகர்களையெல்லாம் கலைத்துக் கருப்பையாபிள்ளையின் கம்பெனிக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். பெரியண்ணாவையும், மாமாவையும் ஒருநாள் திருப்பாதிரிப்புலியூருக்கு அழைத்துப்போய், கருப்பையாப்பிள்ளையைச் சந்திக்கச் செய்தார். கருப்பையாப்பிள்ளை, எங்களைத் தம் கம்பெனிக்கு வந்துவிடும்படியும் அதிகச் சம்பளம் தாம் தருவதாகவும் வற்புறுத்தினார். பெரியண்ணா, அம்மாவிடம் கலந்து கொண்டு இதற்குப் பதில் சொல்லுவதாகக் கூறிவிட்டார். இந்தச் செய்தி எப்படியோ சின்னையா பிள்ளைக்குத் தெரிந்துவிட்டது. அவர் அலறியடித்துக் கொண்டு அம்மாவிடம் வந்து அழுதார். “யார் போனலும் நான் கம்பெனியை நடத்திக் கொள்வேன். நீங்களும் போய்விட்டால் எனக்கு வேறு வழியேயில்லை. எங்கே யாவது போய் விழுந்து உயிரை விடுவதென்று முடிவு செய்து விட்டேன். என் மனைவியின் மாங்கல்யத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று புலம்பினார்.

முதலாளி கருப்பையாபிள்ளை, எங்களோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தந்தை இறந்த சமயத்தில் அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருந்தோம். என்றாலும், சின்னையா பிள்ளையின் அப்போதைய நிலையை எண்ணிப் பார்த்தபோது, அம்மாவுக்கு அவர்மீது இரக்கம் உண்டாயிற்று. என்ன நேர்ந்தாலும் கருப்பையாபிள்ளையின் கம்பெனிக்குப் போவதில்லையென முடிவு கூறி விட்டார்.

எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை நல்ல உடற்கட்டும் வலிமையும் உடையவர். அவரைக் கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவர் ஒருநாள் காமேஸ்வர ஐயர் வந்திருந்தபோது எச்சரிக்கை செய்தார். கூடலூரிலும் திருப்பாதிரிப்புலியூரிலுமாக இரண்டு கம்பெனிகளில் ஒரே சமயத்தில் நீர் இவ்வாறு