பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182


நாடகத் தேதியும் விளம்பரம் செய்து விட்டோம். ஆனால், சாமான்கள் குறித்த தேதியில் வரவில்லை. எங்களுக்கும் எவ்விதத் தகவலும் இல்லை. சேலம் ஜங்ஷனில் கூட்ஸ் வண்டி கழற்றி விடப்பட்டிருப்பதால் அது சரியான நிலையில் இல்லையென்றும், மீண்டும் எங்கள் ஆட்கள் வந்து சாமான்களை வேறு வண்டியில் ஏற்ற வேண்டுமென்றும், சேலத்திலிருந்து வந்த ஒரு நண்பர் கூறினார். பிறகு சேலம் போய் விசாரித்ததில் இது, ரயில்வே கூட்ஸ் ஷெட் அதிகாரி ஒருவருக்கு இலவச டிக்கெட் கொடுக்காததால் ஏற்பட்ட வினையென்பது தெரிய வந்தது. அந்த அதிகாரி தன்னால் இயன்ற புண்ணியத்தைச் செய்து, முதல் நாடகத்தையே நிறுத்தும் படியாகச் செய்து விட்டார். விபரம் தெரிந்ததும் அவருக்கு லஞ்சம் கொடுத்து, அதே வண்டியை மீண்டும் பெங்களுருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்தார் மானேஜர்.

பார்சி கம்பெனி நாடகம்

பெங்களுரில் எங்கள் நாடகம் நடைபெறுவதற்கு முன் அதே கொட்டகையில் பார்சி கம்பெனியாரின் இரு நாடகங்களைப் பார்த்தோம். காட்சி அமைப்புகள் பிரமாதமாக இருந்தன. பிரதான நாடகத்திலேயே நகைச்சுவையை இணைக்காமல் அதற்கென்று ஒரு தனி நாடகமே நடித்தார்கள். பிரதான நாடகத்தில் ஒரு காட்சி முடிந்ததும், நகைச்சுவை நாடகத்தின் காட்சி யொன்று நடைபெறும். இரு நாடகங்களின் காட்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து நடைபெறும். பிரதான நாடகம் முடியு முன்பே நகைச்சுவை நாடகம் முடிந்துவிடும். இந்த முறை எங்களுக்குப் புதிதாக இருந்தது. இருந்தாலும், நாடகங்களை நன்கு ரசித்தோம். இந்த நாடகத்தைப் பார்த்ததின் மூலம் சில புதிய அனுபவங்களைப் பெற்றோம். பெங்களுரில் சரியானபடி வசூல் ஆகவில்லை. இந்த நிலையில் வாத்தியார் கந்தசாமி முதலியாரும், எம். கே. ராதாவும், கே. கே. பெருமாளும் திடீரென்று கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். வாத்தியார் தயாரித்த நாடகங்களை அவர் இல்லாது நடத்துவது கஷ்டமாகி விட்டது. பெரியண்ணா டி. கே. சங்கரன், எம். கே. ராதா புனைந்து வந்த பாத்திரங்களை ஏற்க