பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200


காலவர் நிஷ்டையிலிருக்கும் நிலையில் காட்சி தொடங்கியது. அன்று காலவராக வேடம் புனைந்திருந்தவர் திரு. மாதவராவ் என்னும் சிறந்த ஹாஸ்ய நடிகர். சாதாரணமாக வீட்டிலேகூட அவருடைய நடவடிக்கைகள் எங்களுக்குச் சிரிப்பைத் தருவனவாக இருக்கும். காலவரின் சிஷ்யர்களான மண்டு, கமண்டு வேடங்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், சுந்தரமையர் இருவரும் நடித்தார்கள். மேலே பறந்து செல்லும் கந்தர்வன் சித்திரசேனனுக நான் நடித்தேன்.

நாடகம் அன்றுதான் முதன் முறையாக நடிக்கப் பெற்றதால் நடிகர்கள் அனைவரும் உணர்ச்சியோடு நடித்தார்கள்.

மேடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கம்பியில் இணைக்கப் பட்டிருந்த ஒர் அட்டை விமானத்தில் நான் ஊர்வசியுடன் பறந்து சென்றேன். ஆற்றின் நடுவே விமானத்தை நிறுத்தித் தாம்பூலத்தையும் உமிழ்ந்தேன்.

கொண்டை பறிபோனது

சபையில் ஒரே கரகோஷம். அதைத் தொடர்ந்து பெருஞ் சிரிப்பு. காட்சியை மக்கள் பிரமாதமாக ரசித்ததாக எண்ணிப் பூரிப்படைந்தேன்.

“அடே மண்டு, கமண்டு” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு, “என் வலக்கரத்தில் உச்சிஷ்டத்தை உமிழ்ந்தவர் யார்?” என அலறினார் காலவராக வீற்றிருந்த நடிகர் மாதவராவ். மண்டுவும், கமண்டுவும் ஸ்வாமி என்று ஒடி வந்ததும் சபையில் மேலும் சிரிப்பொலி அதிகரித்தது.

திரை மறைவில், மேலே விமானத்தில் இருந்த எனக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தலையை நீட்டிப் பார்த்தேன். சிஷ்யர்களான என். எஸ். கிருஷ்ணனும், சுந்தரமையரும் மாதவராவைப் பார்த்து, வாயைப் பொத்தியவாறு சிரிப்புத் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்கள். சிஷ்யர்களின் சிரிப்பைக் கண்ட சபையோர், மேலும் கை தட்டிச் சிரித்தார்கள். மாதவராவ் இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. இதற்குள் உள்ளேயும் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின.