பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209


என்று தன் தாயைக் கட்டிக் கொள்கிறான். இதைக் கேட்டு மேலும் எல்லோரும் சிரிக்கிறார்கள்.

கலைவாணர் பேசிய இந்த வசனம், பம்மல் சம்பந்தனரின் நாடகத்தில் இல்லை. என். எஸ். கே. கற்பனையாகப் பேசியது. இந்த வசனத்துக்குச் சபையில் பெருத்த கைதட்டல் ஏற்பட்டது. காட்சி முடிந்ததும் சண்முகம்பிள்ளை உள்ளே வந்தார். என். எஸ் . கிருஷ்ணனைக் கூப்பிட்டார்.

“என்னப்பா, மனோஹரன் மனைவியை வைத்துக் கொண்டு சிரித்தால், வசந்தன் தன் தாயை வைத்துக் கொண்டு சிரிப்பதாகச்சொல்வதா? என்னதான் பைத்தியக்காரனாக இருந்தாலும் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?” சண்முகம் பிள்ளையின் கேள்வி இது. என். எஸ். கிருஷ்ணன் அவர் இவ்வாறு கேட்பாரென்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கேட்டபின் நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே!

  • ஆசிரியர் சம்பந்த முதலியார் அப்படித்தான் எழுதியிருக்கிறார், அதைத்தான் பேசினேன்” என்றார் கலைவாணர்.

சண்முகம் பிள்ளைக்குக் கோபம் வந்து விட்டது. “என்னப்பா, கதையளக்கிறாய்? சம்பந்த முதலியாரை எனக்குத் தெரியாதா? நான் இப்பொழுதுதான மனோகரன் நாடகம் பார்க்கிறேன். அவருடைய நாடகத்தையே நான்தானே இங்கு நடத்தினேன். எனக்குத் தெரியாதா?” என்றார். என். எஸ். கே. இதன் பிறகு வாதாடவில்லை. தான் தவறாகப் பேசிவிட்டதாகக் கூறி, அவரிடம் மன்னிக்க வேண்டினார். கலைவாணர் அவ்வாறு அடங்கிப் போனதும், மன்னிப்பு கேட்டதும் எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது. அவர் எங்கள் குழுவிலிருந்த காலம்வரை, மன்னிப்புக் கோரியது, இதுதான் முதல் தடவை. மேலும். சண்முகம் பிள்ளையிடம் வாதாடாமல் சமரசமாகப் போனதற்கு நாங்கள் எல்லோரும் சந்தோஷப் பட்டோம். கலைவாணரைப் பாராட்டினோம்.