பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231

சின்னண்ணாவுக்கும் உறக்கம் இல்லை. வாயால் பேசவும் இயலாத நிலை.அவரது கண்கள்,அம்மாவின் நிலையை அறிய ஆவல் கொண் டிருப்பது தெரிந்தது. அம்மா உறங்குவதாக அவருக்குச் சைகை காண்பித்து விட்டு,வாயிலில் இறங்கிவிதிக்கு வந்தேன்.நள்ளிரவு: வீதியில் ஜன நடமாட்டமே இல்லை. வானம் நிர்மலமாயிருந்தது. நட்சத்திரங்கள் பளிச்சிட்டன. கம்பெனியின் நீண்ட பணியாளரான கோபால்பிள்ளை மட்டும் திண்ணையில் படுத்திருந்தார். உள்ளே தங்கைமார்கள் சுப்புவும், காமாட்சியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு நாய்கள் ஊளையிட்டன. அருகிலிருந்த கம்பெனி வீட்டுக்குப் போய்வர எண்ணி இரண்டடி நடந்தேன். மீண்டும் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தேன். அறைக்குள்ளே மதினி அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.அறைக் குள் அடியெடுத்து வைத்தேன். அம்மா எவ்விதச் சலனமுமின்றி அமைதியாகக் கிடந்தார்கள். கோபால்பிள்ளையை அழைத்து பார்க்கச் சொன்னேன்... அவர் பார்த்தார். அம்மா எங்களை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்பதை அவர் முகம் காட்டியது.

என் நெஞ்சம் ஏனே கல்லாய் உறைந்திருந்தது!அழுகையே வரவில்லை. மதினியையும் அழ வேண்டாமென்று சமாதானப் படுத்தினேன். சின்னண்ணா ஒன்றும் புரியாமல் விழித்தபடி கிடந் தார். பெற்ற அன்னையார் எங்களைப் பிரிந்து நெடுந்துாரம் சென்று விட்டார்கள். கொடுங் காலரா நோய் பெற்ற தாயை விழுங்கிக் கொண்டது. 1931 ஜனவரி 29-ஆம் நாள் இரவு 12.30க்கு எங்கள் அன்னயார் இறைவனடி சேர்ந்தார்.

மறுநாள் முற்பகல் 11 மணியளவில் அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதுதான் எங்கள் நாடக வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோதனைக் காலம்.கம்பெனி நிலை தத்தளித்தது. திசை தெரியாத காட்டில், சேறு நிறைந்த பாதையில் சிக்கிக் கொண்ட வண்டிக்காரனுடைய நிலைமையில் நாங்கள் இருந்தோம். கம்பெனி என்னும் வண்டியை எப்படி மேலே கொண்டு செல்வது? நடிகர்களின் பெற்றோர்கள் பலர் தமது பையன்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கடிதங்கள் வரைந் தனார். சிலர் நேராகவே வந்து அழைத்துச் சென்றனார். ஒரு மாத காலம் நாடகம் நிறுத்தப்பட்டது.