பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253


களை இதில் பங்கு கொள்ளச் செய்ய விரும்பவில்லையென்றும் சொல்லிவிட்டார். பின்னும் சுந்தரராவ் எங்களுக்கு ஒரு கெளரவ ஆலோசனையாளராகவும், ஆசிரியராகவும், நாங்கள் போகும். ஊர்களுக்கெல்லாம் வந்து கலந்து கொண்டார்.

எம். ஆர். ராதா

பட்டுக்கோட்டையில் நாங்கள் நாடகங்கள் நடத்திக் கொண் டிருந்த போது நடிகவேள் எம். ஆர். ராதா எங்கள் கம்பெனியில் வந்து சேர்ந்தார். என். எஸ். கிருஷ்ணன், ஜெகனாதையர் கம்பெனியிலிருந்தபோது, எம்.ஆர். ராதாவோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்ததால் அவரே கடிதம் எழுதி ராதாவை வரவழைத்தார். ராதா வந்ததும் ஏற்கனவே நடந்து வந்த நாடகங்களில், சில நகைச்சுவை வேடங்களைத் திறமையாக நடித்தார். பதிபக்தி நாடகம் தயாராயிற்று. பதிபக்தி நாடகத்தில் ராதாவுக்கு. அந்நாளில் பிரமாதமான புகழ் இருந்து வந்தது. ஜெகனாதையர் நாடகசபை யாழ்ப்பாணத்தில் கலைந்துபோன பிறகு, ஐயரின் புதல்வர் ராமசுப்பு அந்தக்கம்பெனியை ஒருவாறு ஒழுங்குப்படுத்தி மதுரைக்குக் கொண்டுவந்தார். அந்தக் கம்பெனியில் பதிபக்தி நாடகம் அப்போது முதலிடம் பெற்றது. நாடக ஆசிரியர் எம். எஸ். முத்துகிருஷ்ணன் கங்காதரனாகவும், எம். ஆர். ராதா துப்பறியும் சந்தானமாகவும் தோன்றி மேடையில் பயங்கரமாகச் சண்டை போடுவார்கள். இதை நாங்கள் ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறோம். பதிபக்தியில் நான் ராஜசேகரனாக வேடம் புனைந்தேன். தம்பி பகவதி கங்காதரனுகவும், எம். ஆர். ராதா துப்பறியும் சந்தானமாகவும் நடிக்கத் திட்டமிட்டிருந்தனார். சண்டைபோடும் நுணுக்கங்களையெல்லாம் பகவதிக்கு ராதாவே சொல்லிக்கொடுத்தார். பகவதியும்.அப்போது முரட்டுப் பேர்வழி. சாதாரண விளையாட்டுகளிலே கூட ராதாவுக்கு ஈடுகொடுக்கக் கூடியவர் பகவதி ஒருவர்தான். பதிபக்தியில் அவர்கள் சண்டை போடும் காட்சியைக்காண நாங்கள் ஆவலோடிருந்தோம். பதிபக்தி ஒத்திகை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ராஜசேகரன்

தஞ்சை என்.விஸ்வநாதையர் எழுதிய ராஜசேகரன் நாடக அச்சுப் புத்தகத்தை ஒருநாள் நானும் ராதாவும் படித்தோம்.