பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோல்டன் சாரதாம்பாள்


முதன் முதலாக உடுமலைப்பேட்டையில் நாடகம் தொடங்கியது. ஸ்ரீபால ஷண்முகானந்த சபையின் பெயரால் நடத்தப் பட்டாலும் அது உண்மையில் கோல்டன் கம்பெனியின் நாடகமாகவே விளங்கியது. நாயுடுவின் மனைவியாக இருந்த சாரதாம்பாள் அம்மையார் கம்பெனியில் முக்கிய இடம் பெற்றார். இராமாயணம் நாடகத்திற்குப் புது மெருகு கொடுக்கப்பட்டது. சாரதாம்பாள் மிகச் சிறந்த நடிகையாதலால் புதிய நடிகர்களுக்குத் தினமும் முறையாக நடிப்புப் பயிற்சி கொடுத்து வந்தார். தொடக்கத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. நாங்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைத்தோம். எங்கள் நடிகர்களும் உள்ளன்போடு உண்மையாக உழைத்தார்கள். என்ன செய்தும் பயனில்லை. எங்களைப் பிடித்த ‘ஏழரை நாட்டான்’ நாயுடுவையும் பிடித்துக்கொண்டது போலும்!

கோல்டன் கம்பெனியார் ஒரு காலத்தில் இராமாயணம், மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ண லீலா முதலிய பெரிய நாடகங்களை யெல்லாம் பிரமாதமாக நடத்தியவர்கள். எனவே புதிதாக மகா பாரதம் பாடம் கொடுக்கப்பெற்றது. மகாபாரதத்தில் சாரதாம்பாள் அம்மையாரே துரோபதையாக நடித்தார்.

கம்பெனியின் எல்லாப் பொறுப்புக்களையும் நாயுடுவே கவனித்து வந்தார். எனவே, பெரியண்ணா, நடிகர்கள், ஏனைய, தொழிலாளர்களுக்குரிய சம்பளத் தொகையை ஒப்பந்தப்படி தாமே வாங்கிக் கொடுக்க விரும்பவில்லை. நேரடியாக நாயுடு விடமே எல்லோரும் சம்பளம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். நாயுடுக்கு இந்த ஏற்பாடு மிகவும் செளகரியமாகப் போய்விட்டது. அவர் இதைப் பயன்படுத்திக் கொண்டு நடிகர்