பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271


இருக்கும். முன் எவரும் பாடாத முறையில் புதிய புதிய சங்கதிகளைப் போட்டுத் தியாகராஜன் பாடினன். ஒருநாள் பாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அசட்டையாக எங்கோ கவனித்துக் கொண்டிருந்தான். எதிரேயிருந்த நான், கையில் பிரம்பை எடுத்து “எங்கே கவனிக்கிறாய்?” என்று அவனது தலையில் தட்டினேன். பிரம்பின் நுனி அவன் தலையில் பொத்துக் கொண்டது. கொட கொடவென்று ரத்தம் கொட்டிவிட்டது. நான் பதறிப்போய் விட்டேன். அவன் அழவேயில்லை; என்னுடைய அறியாத்தனத்திற்காக அன்றிரவு முழுதும் வருந்தினேன். உறக்கமே வரவில்லை.

வள்ளித்திருமணம் நாடகத்திலே தியாகராஜன் வள்ளியாக வேடம் தாங்கி வருவான். “எந்த மானிட வேடர் நீர்காண்” என்னும் விருத்தத்தைச் சங்கராபரணத்திலே அவன் பாடும் போது நான் வேடனாக நிற்பேன்; மெய் மறந்து நிற்பேன். என்றாவது ஒரு நாள் அவன் நாடகத்துறையை விட்டு இசைத் துறைக்குப் போய், அபாரத் திறமையோடு விளங்குவானென அன்றே எண்ணினேன். என் எண்ணம் வீண் போகவில்லை. அந்த இளஞ்சிறுவன்தான் இன்று சங்கீத விற்பன்னராக விளங்கும் இசைமேதை தஞ்சை டி. எம். தியாகராஜன்.

பசுவை விலை பேசினார்

தஞ்சையில் சில நாடகங்களை நடத்தி விட்டுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம். திண்டுக்கல்லில் வசூலாகவில்லை. தர்மராஜ பிள்ளை பெரும் செல்வந்தர் என எண்ணினோமல்லவா? அதற்கு முற்றிலும் மாறாக ஒட்டை மூங்கிலாக இருந்தார் அவர். அவரது மனப்பான்மையை விளக்குவதற்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறேன்.

கம்பெனிக்குக் காலை மாலை இரு வேளைகளிலும் காப்பிக்காகப் பால் வாங்குவது வழக்கம். ஏற்கனவே எங்களுக்குப் பழக்கமாயிருந்த ஒரு பால்காரர் பால் கொடுத்து வந்தார். திண்டுக்கல்லுக்கு வந்த மூன்றாம் நாள் பால்காரர் வரும்போது தர்மராஜபிள்ளையும் இருந்தார். பால்காரரிடம் பாலின் விலை, முதலிய விபரங்களையெல்லாம் விசாரித்தார். திடீரென்று