பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277

 வந்து போடுவதும், சோடா வேண்டுமா, காபி வேண்டுமா என்று கேட்பதும், விசிறி கொண்டுவந்து வீசுவதுமாக, நாடகம் முடிந்து நான் மீண்டும் காரில் ஏறும்வரையில் அவர்கள் அரங்கிற் குள் நடத்திய பாவனை, படாடோபங்களை யெல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனி

திடீரென்று ஒரு நாள் பாலகிருஷ்ண சாஸ்திரியிடமிருந்து கடிதம் வந்தது. மடிந்து கொண்டிருந்த பழைய ஜெகனாதையர் கம்பெனி நடிகர்களில் சிலர் அவருடைய நிருவாகத்தில் வேலூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். பாலகிருஷ்ணசாஸ்திரி ஏற்கனவே எங்களுக்குப் பல ஆண்டுகளாக அறிமுகமானவர். மின்சாரம் இல்லாத கொட்டகைகளில் அவர்தான் இஞ்சின் கொண்டு வந்து, வாடகைக்கு மின்சாரம் கொடுத்து உதவுவார். எங்களிடம் அவருக்கு அபார நம்பிக்கை. வேலூருக்கு வந்து, தாம் நடத்தும் கம்பெனியில் ஒத்துழைக்க வேண்டுமென்று அவர் கடிதம் எழுதியிருந்தார். ஊரில் சும்மா இருப்பதைவிடச் சில காலம் அவரது நிர்வாகத்தில் இருக்கலாமென எண்ணினோம், பெரியண்ணாவை ஊரில் அமைதியாக இருக்கவிட்டு நான், சின்னண்ணா, பகவதி மூவரும் வேலூருக்குப் பயணமானோம், வேலூருக்கு வந்தபின்தான் அறிந்தோம் கம்பெனியின் நிலைமையை.

பாலசுப்பிரமணியத்தின் அன்பு

கம்பெனியின் நிருவாகம் யாரிடத்தில் இருக்கிறதென்றே புரியவில்லை. சாப்பாட்டு நிருவாகம் ஒழுங்காக இல்லை. டி. பால சுப்பிரமணியம் தாயுடன் தனியே குடியிருந்தார். நாங்கள் வந்ததற்காக உண்மையில் சந்தோஷப்பட்டவர் அவர் ஒருவர்தாம். அவரும் நாங்களும் நன்கு அளவளாவி மகிழ்ந்தோம். அவருடைய தாயார் எங்களிடம் மிகவும் பரிவு காட்டினார்கள். டி. பால சுப்பிரமணியம் ஜெகனாதையரின் ஸ்ரீபால மீன ரஞ்சனி சங்கீத சபையில் இருந்தவர். பழம் பெரும் நடிகர். ஐயர் கம்பெனியில் சங்கரதாஸ் சுவாமிகள் ஆசிரியராக இருந்த காலத்தில், அவரிடம் பயின்றவர். சுவாமிகளிடம் அளவுகடந்த பக்தியுடையவர்.