பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276


இரண்டாவது ஸ்பெஷல் நாடகம் சதாரம். நாகர்கோவில் மீனாட்சிபுரத்திலுள்ள ஸ்ரீமீனாம்பிகா தியேட்டரில் நடந்தது. அதில் நான் மயோனாக நடித்தேன். மற்றப் பாத்திரங்களைத் தாங்கி நடித்தவர்களின் பெயர்கள் எனக்கு நன்கு நினைவில்லை. சதாரத்தைச் சல்லாபம் செய்ய அழைக்கும் கட்டத்தில், நான் பாடிய காதல் பாட்டுக்களை ரசிகர்கள் பிரமாதமாக ரசித்துக் கைதட்டிப் பாராட்டினார்கள். சுவாமிகளின் நாடகங்களிலுள்ள எத்தனையோ காதல் பாட்டுக்களும், உரையாடல்களும் எனக்கு மனப்பாடமாய் இருந்ததால் சிறிதும் சிரமப் படாமல் சமாளித்தேன். தாமரைக் குளத்தைப் போலவே இங்கும் பெரும் புகழ் கிடைத்தது. இரண்டு ஸ்பெஷல் நாடகங்களிலும் பேரும் புகழும் பெற்று விட்டதால் ஸ்பெஷல் நாடகக் காண்ட்ராக்டர்கள் என்னை முற்றுகை யிட்டார்கள். ஆனால் எனக்கோ, என் சகோதரர்களுக்கோ இந்த நாடகங்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை. நாடகத் துறையில் எங்களுக்கு ஒரு இலட்சியம் இருந்ததால், இந்த நாடகங்களின் மூலம் நல்ல வருவாய் வந்த போதிலும் கட்டுப்பாடில்லாத இந் நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நான் விரும்பவில்லை.

ஆடம்பரமும் அமுலும்

ஸ்பெஷல் நாடகத்திற்கு நான் நடிக்க ஒப்புக்கொண்டதும் எனது மருமகன் டி. என். சிவதாணுவுக்கும், எங்கள் பழைய நடிகரும் எங்கள் அன்புக்கு பாத்திரருமான கொல்லம் பால கிருஷ்ணனுக்கும் ஒரே குவி. ஸ்பெஷல் நாடக ராஜபார்ட்டு காரர்களுக்குச் சில கையாட்கள் நடத்தும் ஆடம்பரப் படாடோபங்களை எனக்கும் நடத்த இவர்கள் ஆசைப்பட்டார்கள். முதல் நாடகத்தன்று நான் காரில்போய் தாமரைக் குளம் நாடகக் கொட்டகைக்கு முன் இறங்கியதுமே இவர்களது இந்த அமுல் தொடங்கிவிட்டது. என் முன்னை கூடிநின்றவர்களை யெல்லாம் ‘விலகுங்கள் விலகுங்கள்’ என்று சொல்லி, அமளி துமளிப்படுத்தினார்கள். இது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. நான் எவ்வளவோ தடுத்து விலக்கியும் இவர்கள் கேட்கவில்லை. ஸ்பெஷல் நாடக ராஜபார்ட்டுக்கு இந்த ஆடம்பரமெல்லாம் தேவையென்று சொல்லி என் வாயை அடைத்து விட்டார்கள். காட்சி முடிந்து நான் உள்ளே வரும்போது, நாற்காலி கொண்டு