பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

 தோழர் ஜீவாவுக்கு ஆண்டவன் இருப்பதாக நம்பிக்கை இல்லை. ஆனால் ஓடிப் போகத் தீர்மானித்த எனக்கு, அறிவுரை கூறித் திருத்த ஆண்டவனே ஜீவாவை அனுப்பியதாக எண்ணினேன் நான்.

நீலகிரியில் வசூல் இல்லாமலே ஒருமாத காலம் நாடகம் நடந்தது. மீண்டும் மேட்டுப்பாளையம் வந்தோம். குழப்ப நிலை திரவில்லை. மயில்ராவணன் நாடகத்தைப் புதிய முறையில் எழுதிச் சிறப்பாகத் தயாரித்தார் சின்னண்ணா. நாடகம் அருமையாக அமைந்தது. வசூல்தான் இல்லை. அருகிலுள்ள கோபிச்செட்டிப் பாளையம் போவதென்று முடிவு செய்தார்கள். பஸ்ஸிலேயே கோபிச்செட்டிப்பாளையம் வந்து சேர்ந்தோம்.

மயில்ராவணன் தகராறு

கோபிச்செட்டிப் பாளையத்தில் மயில்ராவணனுக்கும், பம்பாய் மெயிலுக்கும் நல்ல வசூலாயிற்று. மயில்ராவணன் நாடகத்தில் எம். ஆர். சாமிநாதன் காளிகோயில் அர்ச்சகராக நடிப்பார். கடைசியாக ஆஞ்சநேயர், காளி சிலைக்குப் பின்னல் மறைந்து கொண்டு பேசும் கட்டத்தில், எம். ஆர். சாமிநாதன் உள்ளே போகப் பயந்து, நான் பிராமணனே இல்லையென்று பூணூலைக் கழற்றிக் கொடுத்துவிட்டு ஓடிப் போவார். இந்தக் காட்சியில் அவர் பேசும் பேச்சைக் கோபிச்செட்டிப்பாளையத்திலுள்ள சில பிராமணர்கள் வெறுத்தார்கள். நாடக அமைப்பில் இந்தக் காட்சியில் தவறு ஒன்றும் இல்லாததால் நாங்கள் மற்றவர்களுடைய வெறுப்பை லட்சியம் செய்யவில்லை.

மயில்ராவணன் நாடகம் முடிந்த மறுநாள் வழக்கம்போல் எல்லோரும் வாய்க்காலுக்குக் குளிக்கப் போனோம். அங்கே பிராமணர்களுக்கென்று தனியாக ஒரு படித்துறை இருந்தது. அந்தப் படித்துறையிலும் சில நடிகர்கள் குளித்தார்கள். அதற்கு முன்பெல்லாம் ஒன்றும் பேசாத சில பிராமணர்கள், அன்று பிராமணர்கள் படித்துறையில் நாங்கள் குளிக்கக் கூடாதென்று ஆட்சேபித்தார்கள். எம். ஆர். சாமிநாதன் குறும்புப் பேர்வழி. அவர் படித்துறையை விட்டுத் தண்ணிரில் இறங்கி நின்று