பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

315


றார்கள். திருமதி கே. பி சுந்தராம்பாள் அம்மையார், காங்கிரஸ் சார்பில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் பம்பாயிலிருந்து திரும்பியதும் அவர்களை ஈரோட்டில் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தம்முடன் என்னைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டுமென்று விரும்பினார்கள். திரு ஈஸ்வரன், திரு முத்துக்கருப்பன் செட்டியார், குழந்தைவேலு செட்டியார் முதலிய காங்கிரஸ் தலைவர்கள் இதை ஆமோதித்தார்கள். ஈரோடு ஈஸ்வரன் சிறந்த தேச பக்தர். நாங்கள் முதன் முதல் ஈரோட்டுக்குச் சென்ற காலத்தில் நெருங்கிப் பழகியவர். முற்போக்கான லட்சியங்களைக் கொண்டவர். நாங்கள் பம்பாய் சென்றபோது அவரையும் எங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றிருந்தோம். எல்லோரிடமும் இனிய முறையில் பழகுபவர். அவருடைய வேண்டுதலைப் புறக்கணிக்கப் பெரியண்ணாவால் இயலவில்லை. எனவே பெரியண்ணாவும் இதற்கு ஒப்புதல் தந்து, நாகர்கோவில் பயணத்தை இரண்டு நாட்கள் ஒத்திப்போட்டார், நான் கே. பி. எஸ். அவர்களுடன் கிராமம் கிராமமாகச் சுற்றித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன்; நான் பாடுவேன். கே. பி. எஸ். அவர்கள் பேசுவார்; கே.பி. எஸ். பாடினால், நான் பேசுவேன். இறுதியில் கே.பி. எஸ். மஞ்சள் பெட்டியின் மகிமையைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசுவார். இப்படியே ஈரோடு தாலுக்காவில் பல கிராமங்கள் சுற்றினோம், அப்போது கே. பி. எஸ். அவர்கள் பேசிய ஆவேசப் பேச்சை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. கொடுமுடிவரை போய் சுந்தராம்பாள் அம்மையாரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பினேன்.

பிரியா விடை

19ஆம் தேதி நாகர்கோவிலுக்குப் பயணம் என்பது உறுதி செய்யப்பட்டது. எங்களிடமிருந்த சீன் சாமான்களையெல்லாம் அருகிலுள்ள பவானி கொட்டகையில் கட்டி வைக்க ஏற்பாடு செய்தோம். உடைகள் வைக்கும் பெட்டி, புத்தகப் பெட்டி எல்லாமாகப் பதினறு பெரிய பெட்டிகள் இருந்தன. அவற்றை எங்கள் நண்பரும், சமய சஞ்சீவியுமான கிட்டு ராஜூவிடம் ஒப்படைத்தோம். மற்றும் சில சாமான்களை சீன் வேலையாட்களுக்குக் கொடுத்தோம். எல்லா வேலைகளும் முடிந்தன. புறப்படும்