பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316


நாள் காலையில் பெரியார் ஈ. வே. ரா. அவர்களிடம் விடைபெறச் சென்றோம், நாங்கள் கம்பெனியை நிறுத்தப் போகிறோம் என் பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. செய்தியைக் கேட்டதும் மிகவும் வருந்தினார்.

“இனிமேல்தான் உங்கள் நாடகக் குழுவுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. இந்த நல்ல சமயத்தில் கம்பெனியை நிறுத்துவது சரியல்ல. அவசியமானல் சில மாதங்கள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் கம்பெனியைத் தொடர்ந்து நடத்துங்கள். இதை என்னுடைய அறிவுரையாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பரிவோடு கூறினார். மற்றும் ஈரோட்டிலிருந்த எங்கள் நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு அன்று பகல் ரயிலில் புறப்பட்டு மறுநாள் இரவு ஏழு மணியளவில் நாகர் கோவில் வந்து சேர்ந்தோம். எங்கள் நாடக வாழ்க்கையில் ஒரு பகுதி முடிந்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பெரியண்ணாவுக்கு நாடக வாழ்க்கையில் அலுப்புத் தட்டி விட்டது. 1918 முதல் 1935 வரை பதினேழு ஆண்டுகள் ஒய்வின்றி உழைத்ததின் பலனை எண்ணிப் பார்த்த பிறகு அவருக்கு நாடகம் என்றாலே வேப்பங்காயாகிவிட்டது. படத்தில் கிடைத்த சொற்ப ஊதியத்தையும் பாழாக்கி விட மனமின்றி வேறுதொழில்களில் ஈடுபட முயற்சித்தார். படத்தில் எங்களுக்குக் கிடைத்த தொகையைக் கொண்டு அடகு வைத்திருந்த நிலத்தை மீட்டோம்.

தங்கையின் திருமணம்

தங்கை சுப்பமாளுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட்டோம். நாடகக்காரர்களின் குடும்பத்தில் பெண் கொள்ளப் பெரும்பாலோர் விரும்பவில்லை. நாகர்கோவிலுக்கு மூன்றாவது மைலிலுள்ள சுசீந்திரம் அக்கரையில் தங்கைக்குப் பொருத்தமான வரன் கிடைத்தார். மாப்பிள்ளைக்குத் தாய் தந்தை இல்லை. தமையனும் தமக்கையும் முன்னின்று பேச்சு வார்த்தைகளை முடித்தார்கள். 1936 பிப்ரவரி 2 ஆம் தேதி சுப்பையாபிள்ளைக்கும், சுப்பம்மாளுக்கும் திருமணம் நடந்தேறியது.

தங்கையின் திருமணத்திற்கான செலவுகள் போகமீதியிருந்த் சொற்பத் தொகையைக் கொண்டு ஒரு சிறிய ஷராப் கடை