பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336


வழக்கமாக மூன்று மணிநேரம் உறங்குவேன். இப்போது அந்த நேரத்தில் பத்திரிகை எழுத நேர்ந்ததால் பகல் உறக்கம் இல்லாமல் போய் விட்டது. எனவே, இரவுநாடகத்தின் போது கொட்டாவி விடத்தொடங்கினேன். சில சமயங்களில் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன. இந்நிலையில் கம்பெனி சேலம், ஆம்பூர் முதலிய ஊர்களுக்குச் சென்றது.

ஜீவானந்தம் பாடல்கள்

தோழர் ஜீவானந்தம் அடிக்கடி எங்களோடு வந்து தங்கு வாறென்று முன்னல் குறிப்பிட்டேனல்லவா?இது பற்றிச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டியது என் கடமையாகும். அவர் எங்க ளோடு தங்கியிருந்த நாட்களில் புதிது புதிதாகப் பல பாடல்களை இயற்றியதுண்டு. எல்லோரும் பாடும்படியான எளிய மெட்டுகளிலேயே பாடல்கள் அமைய வேண்டுமென்பது அவர் விருப்பம். எங்கள் நாடகங்களிலுள்ள புதிய மெட்டுகள் சிலவற்றை நான் பாடுவேன், கோவைத் தோழர் ராமதாஸ் திரைப்படப் பாடல்களைப் பாடுவார். அந்த மெட்டுகளிலெல்லாம் ஜீவா உடனுக்குடன் பிரசாரப் பாடல்கள் புனைந்து தருவார். அப்படி ஜீவா பாடிய பாடல்கள் எத்தனை எத்தனையோ!

சிவபெருமான் கிருபை வேண்டும்-அவர்
திருவருள் பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்

(சிவ)

இந்தப் பாடல் தியாகராஜ பாகவதர் அவர்களால் திரைப் படத்தில் பாடப் பெற்றது. அந்தக் காலத்தில் பொதுமக்கள் எல்லோருடைய நாவிலும் நின்றது. இதே மெட்டில் ஜீவா பாடினார்.

பொதுவுடமை பெற வேண்டும்-உடன்
புரட்சி செய்திட வேண்டும்
வேறென்ன வேண்டும்

(பொது)

இந்தப்பாடலை நான் எங்கள் தேசபக்தி நாடகத்திலே ஒரு காட்சியில் இணைத்துப் பாடினேன்.

நானோர் தொழிலாளி-ஒரு
நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும் வழியில்லை
ஏனோ புவி வாழ்வு?