பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

349


யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை குழுவினரில் சிலர் வந்திருந்தார்கள். அவர்களும் எங்களோடு சேர்ந்து வருத்தப்பட்டார்கள். மறு நாள் நாடகமாதலால் இரவு, நாடகம் முடிந்ததும் உடனடியாகச் சாமான்களையெல்லாம் அப்புறப்படுத்தி விடவேண்டுமென்று கொட்டகைக்காரர் உத்திரவு போட்டார். இது மிகவும் சிரமமான காரியம் என்பது கொட்டகைச் சொந்தக்காரருக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் வேண்டுமென்றே இப்படிச் செய்தார். பெரியண்ணா எதற்கும் மனம் கலங்கவில்லை. நாடகம் முடிந்ததும் சாமான்கள் அத்தனையையும் அரங்கத்திலிருந்து அகற்றிவிடும்படி ஆணையிட்டார். காட்சியமைப்பாளரும் நடிகர்களுமாகச் சேர்ந்து சாமான்கள் முழுவதையும் இரவோடிரவாகக் கொட்டகைக்கு வெளியே வெட்ட வெளியில் கொண்டு வந்து போட்டார்கள்.

மறுநாள் நாடகத்தன்று மாலை சின்னண்ணா கொட்டகை வாயிலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த என். எஸ். கிருஷ்ணனுக்கும் சின்னண்ணாவுக்கும் பலத்த வாக்குவாதம் நடை பெற்றதாக அறிந்தேன். வருந்தினேன். ஆனாலும் எங்களுக்கெல்லாம் அன்றைய நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரே ஆசை. பெரியண்ணாவுக்குப் பயந்துகொண்டு ஒருவரும் போக வில்லை. நாடகம் முடிந்த மறுநாள் சீன் வேலையாட்களில் சிலர் வந்து, நாடகத்தில் கூச்சலும் குழப்பமும் இருந்ததாகவும், அமைதியாக நடைபெறவில்லையென்றும், வசூலும் எதிர் பார்த்தபடி இல்லையென்றும் சொன்னார்கள். நாடகத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நாங்களே காரணமென்றும், முன் கூட்டியே திட்டமிட்டு வேலை செய்திருப்பதாகத் தோன்றுகிறதென்றும் கலைவாணர் கருதியதாக அறிந்தோம். எங்களிடையே இருந்து வந்த மனத்தாங்கல் இந்த நிகழ்ச்சியால் மேலும் வளர்ந்தது. பொன்னமராவதி போய்ச் சேர்ந்தோம்.

சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர்

பொன்னமராவதி எங்களுக்குக் கொஞ்சம் கைகொடுத்தது. அங்குப் பிரசித்திபெற்ற கதா காலட்சேப வித்வான் சூலமங்கலம் வைத்தியகாத பாகவதர் எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் நடித்த இராமாயணம் அவரை மிகவும் கவர்ந்தது. அதைப் பாராட்டு