பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374


திருமணம் நடைபெறும் என்ற செய்தியினை நான் அறிந்தேன். என் வேண்டுகோளை யாருமே பெரியண்ணா காதில் போடவில்லை என்ற உண்மை அப்போதுதான் எனக்குத்தெரிந்தது. அவரிடம் இதைச் சொல்ல அஞ்சி அனைவரும் மெளனம் சாதித்து விட்டார்கள் என்பது புரிந்தது. நானும் பெரியண்ணாவின் மனம் புண்படும்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்று கட்டப்பாட்டுக்கு அடங்கினேன். புரோகித மறுப்புப் பெரிதா? சகோதரப்பாசம் பெரிதா? என்ற மனப் போராட்டத்தில் சகோதர பாசமே தலைதுாக்கி நின்றது; வென்றது!

4-7-1941 இல் மதுரை இராமநாதபுரம் சேதுபதி மன்னார் மாளிகையில் சேலம் செவ்வாய்பேட்டை செல்வி மா. மீனாட்சிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆம்! புரோகித முறைப்படி வட மொழியில் மந்திரங்கள் ஒதித்தான் மாங்கல்யம் சூட்டினேன். என் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய நாதசுர வித்வான் குளிக்கரை திரு. பிச்சையப்பா அவர்கள் குழுவினார் நாதசுர இன்னிசை பொழிந்தார்கள். வேய்ங்குழல் மாமன்னார் டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் புல்லாங்குழல் கச்சேரி மாலையில் விமரிசையாக நடந்தது.

ஏற்கனவே மனஸ்தாபம் காரணமாக விலகியிருத்த மாமா திரு. செல்லம்பிள்ளை என் விருப்பத்திற்கிணங்க திருமணத்திற்கு வந்திருந்து, வாழ்த்தினார். காரைக்குடியியில் ஏற்பட்ட சம்பவத்தினால் கம்பெனிக்கு வராதிருந்த கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனும் தம் மனைவி மதுரம் அம்மையாரோடு வந்து கலந்து கொண்டார். கருத்து வேற்றுமையால் பிரிந்திருந்த இவர்களெல்லாம் மீண்டும் ஒற்றுமையுணர்வோடு வந்து உறவாடிக் களிக்க என் திருமணம் காரணமாக இருந்தது குறித்து நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். திருமணத்தையொட்டி சேலம் சென்று, மறுவீடு மற்றும் சடங்குகள் எல்லாம் முடித்து, மதுரைக்குத் திரும்பி, புதிய நாடக வேலைகளில் ஈடுபட்டேன்.