பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394


இணைத்திருக்கும் வால்பெட்டியின் கயிற்றை உள்ளிருந்தபடியே இழுக்க வேண்டும். மேகங்களின் இடையே தாமரை மொட்டு மேலெழுந்துதோன்றும். பின்பு இதழ்கள் விரிந்துமலரும், பிரமன் பேசுவார். அதே போன்று கலைமகளும் காட்சி தரவேண்டும். வால் பெட்டியைத் தாங்கி நிற்கும் இரும்புக் குழாய் தெரியாமல் இருக்க அதனைத் தாமரைத் தண்டுபோல் தோன்றும் வண்ணம் பச்சை நிறம் பூசிவிடுவோம். கலைமகள் பேசியதும் காட்சி முடிகிறது. இதனை முதல் நாள் இரவே பல முறை ஒத்திகை பார்த்து வைத்திருந்தோம். காட்சி தொடங்கியது. வேட்டுச் சத்தம் கேட்டதும் செந்தாமரை மொட்டு உயர்ந்தது, பின்பு இதழ்கள் விரிந்து மலர, பிரமன் தோன்றினார். அவையோர் ஆர்வத்தோடு கைதட்டிப் பாராட்டினார். இரண்டாவது வேட்டுக்கு வெண்தாமரை மொட்டு உயர்ந்து மலர்ந்தது. அதில் வீற்றிருந்த கலைமகள் அசைந்தாடித் தள்ளாடித் தடுமாறிக் கீழே விழுந்து மேகத் தட்டிக்குள் மறைந்தாள். அவையில் சில அனுதாப ஒலிகள் கேட்டன. திரைவிடப்பட்டது. வால் பெட்டி உயரும்போது சிறிது சமாளித்துக்கொள்ளாது கலைமகளாக நடித்த பையன் ஆடியதால், மலர் விரிந்ததும் கிழே விழ நேர்ந்தது. மீண்டும் கலைமகளைத் தூக்கி உட்கார வைத்துக் காட்சியை ஒருவாறு முடித்தோம். ஆரம்பநாளிலேயே அசம்பாவிதம் ஏற்பட்டதால் ஒளவை நாடக வெற்றியில் யாருக்கும் நம்பிக்கை ஏற்பட வில்லை. கலைமகள் தடுமாறி விழுந்தது பெரிய சகுனத்தடை என்றார்கள். நான் இதனாதெல்லாம் சிறிதும் சோர்ந்து விடவில்லை. வசூல் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் நாடகம் தொடர்ந்து பதினேழு நாட்கள் நடந்தது. புலவர்களும் அறிஞர்களும் வந்து பார்த்து என்னை உளமாரப் பாராட்டி உற்சாகப் படுத்தினார்கள். வேறு சில நாடகங்கள் நடந்தபின் மீண்டும் வடலூர் இராமலிங்க சாமிகள் மடத்தின் நிதிக்காக ஒளவை யாரையே நடித்தோம். அன்று வாரியார் சுவாமிகள் தலைமை தாங்கி வாழ்த்தினார்கள்.

எங்கள் குறிக்கோள்

ஒளவையாராக வேடம் புனேந்து நடிப்பதற்கு நானும்எனது முன்னோர்களும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்றே