பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

397


களின் மேல் என்றுதான் எதிர்பார்த்தோம். அவர்களை யாரும் தடுப்பாரில்லை. ஆனால், ஆவேசத்தினிடையே அன்பு தாண்டவ மாடியது. திடீரென்று ஒரு குரல். டே, டி. கே. பிரதர்ஸ் கொட்டகைடா, கல்லெறியாதீங்க” என்றது. தெய்வமே குரல் எழுப்பியதாக நினைத்தோம்.

திருமணமான நான், மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத் திய சமயமல்லவா? இந்தப் புரட்சியைக் கண்டு அவள் நடுங்கினாள். சேலத்தில் இதையெல்லாம் பார்த்ததில்லை. அவளுக்கு நான் ஆறுதல் கூறினேன். அன்று மாலை நான்கு மணி. வீட்டுக்கு அருகிலேயே கலகம்! எதிரே ஒரு மளிகைக் கடையில் கொள்ளை ! நானும் என் துணைவியுடன் மாடியில் நின்று வேடிக்கை பார்த்தேன். கொள்ளையில் குதுகலித்த வீரர்கள் கல்லாலும், கம்பாலும் வீதியிலிருந்த வீட்டின் கதவுகளை விசாரித்துக் கொண்டே சென்றார்கள். எங்கள் வீட்டுக் கதவிலும் ஒர் அடி! என் பக்கத்தில் ஒரு கல்! ‘ஐயோ!’ என்று அலறினாள் மனைவி. உடனே ஒரு சத்தம், “டே, அயோக்கியப் பயல்களா, டி. கே. ஷண்முகம் வீடுடா, நிக்கிறாரு தெரியலே?” அவ்வளவு தான், வீரர்கள் கண்கள் மேலே பார்த்தன. போகிற போக்கில் சில கைகள் தலைக்கு மேலே உயர்ந்து வணக்கமும் செய்தன. ரகசியப் போலிசார் பார்த்தார்களோ, என்னவோ. யாருக்குத் தெரியும்? காக்கி உடை தரித்த போலீஸ்காரர்களைத் தான் அன்று காணவே இல்லை: கலக வீரர்களின் இந்த அன்பு வணக்கம் எங்களையும் புரட்சிக் கூட்டுறவில் சம்பந்தப்படுத்தி விடலாமல்லவா? கம்யூனிஸ்டுகளுக்கு நாங்கள் உதவி புரிவதாக ஏற்கனவே போலீ சாருக்கு மொட்டைக் கடிதங்கள் போயுள்ளன. தலைமறைவாக. இருக்கும் சிலர் என்னை அடிக்கடி வந்து சந்திப்பதாகப் புரளியிருந்தது. இரண்டு நாட்கள் ஊரெங்கும் இந்த அமளி நடந்தது. இந்த நிலையில் இருட்டடிப்பு உத்தரவும் வந்தது. சென்னையில் எதிரி விமானம் பறந்தததாகச் சொன்னார்கள். நாங்கள் மதுரையிலிருந்து கும்பகோணத்திற்குப் பறந்தோம்.