பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

493


நாடகம் பார்க்க வந்தார்கள். அன்றைய நாடகத்தைப் பார்த்து விட்டுத்தான் விமர்சனம் எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது. விமர்சனத்தில் வெளியிட்டிருந்த கருத்து எனக்கு நிரம்பவும் பிடித்தது. அதற்கு நன்றி கூறி ஜனசக்தி மூலமாக ம.பொ. சி. அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதன் பிறகு தான் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்ற பாரதி பாடலை நாடகத்தின் இறுதியில் பாடும் வழக்கத்தை தாங்கள் மேற்கொண்டோம். இடையே ஒரு நாள் நாடகத்திற்கு தேசீயக் கவினார் நாமக்கல் வெ. இராமலிங்கம்பிள்ளை தலைமை தாங்கி எங்களைப் பாராட்டினார். 9.7.45இல் 50வது பொன் விழா பிரபல அமைச்சூர் நடிகர் எப். ஜி. நடேசய்யர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாடகாசிரியர் திரு எதி ராஜுலு நாயுடுவுக்குக் கம்பெனியின் சார்பில் ஒரு பொற்பதக்கம் பரிசளிக்கப்பட்டது. நாடகாசிரியரையும் நடிகர்களையும் பிரமாத மாகப் பாராட்டிப் பேசினார் நடேசய்யர்.

நாமக்கல் கவிஞருக்கு நாடகம்

19-7.45இல்தொடங்கிய முதல் சிவாஜி நாடகம் நாமக்கல் கவிஞரின் நிதிக்காக நடத்திக் கொடுக்கப் பெற்றது. அன்று வெங்களத்தூர் சாமிகாத சர்மா அவர்கள் தலைமை தாங்கினார். அருமையாகப் பாராட்டிப் பேசினார். திரு அ. சீனிவாசராகவன், நண்பர் சாவி ஆகியோரும் பாராட்டிப் பேசினார்கள். அன்றைய வசூல் ரூ 1201 நிதியின் பொருளாளர் திரு சக்தி வை. கோவிந்தள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

23.7.45இல் நடைபெற்ற சிவாஜி நாடகத்திற்கு மேற்படி நாடகாசிரியரும் பிரபல கண் வைத்தியருமான டாக்டர் டி. எஸ். துரைசாமி அவர்களின் தமையனார் திரு டாக்டர் டி.எஸ். திருமூர்த்தி தலைமை தாங்கிப் பாராட்டினார். 15-8-45இல் நடைபெற்ற சிவாஜி நாடகத்திற்கு பிரசண்ட விகடன் ஆசிரியர் திரு. காரண துரைக்கண்ணன் தலைமை தாங்கி, டி. கே. எஸ். சகோதரர்கள் விரைவில் சென்னைக்குவந்து,தலைநகரிலுள்ள ரசிகர்களையும் மகிழ் விக்க வேண்டுமென்று கூறிப் பாராட்டினார். திருச்சியில் சிவாஜி நாடகம் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்றது.