பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538


நடவடிக்கை எடுத்துக் கொள்ள நேருமென்றும் நோட்டீசில் குறிப்பிட்டிருந்தது. வக்கீலின் யோசனைப்படி,

பாரதி பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச்சொத்தென்றும் அவற்றிற்குத் தனி மனிதர் உரிமை கொண்டாடுவதை ஒப்புக் கொள்ள முடியாதென்றும் நாங்கள் பதில் நோட்டீஸ் கொடுத்தோம்.

காவிரியில் காந்தி அண்ணலின் அஸ்தி கரைப்பு

காந்தியடிகளின் அஸ்தியினை இந்தியாவின் புண்ணிய நதி களிலெல்லாம் கரைக்க வேண்டுமென்று பாரதப் பேரரசு விரும்பியது. அதன்படி திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் கரையருகில் அஸ்தி கரைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. புனிதமான அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நானும் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், திரு ஏ. கிருஷ்ணசாமி செட்டியார் முதலியோரும் திருச்சிக்குச் சென்றிருந்தோம். 12. 2. 48இல் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அம்மா மண்டபக் கரையருகில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. கூட்ட நெருக்கடியில் போக வேண்டாமென்று நண்பர்கள் என்னைத் தடுத்தார்கள். உணர்ச்சிப் பிழம்பாக நின்ற நான் அந்தக் கூட்டத்தில் “வாழ்க நீ எம்மான்” என்ற மகாகவி பாரதியின் பாடலைப் பாடவேண்டுமென்று துடித்தேன். போலீசார் தங்களால் இயன்ற அளவு பெரு முயற்சி செய்து ஜன சமுத்திரத்தில் மூழ்க இருந்த என்னைக் காப்பாற்றி மைக் அருகிலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள். கண்ணிர் விட்டுக்கொண்டே “மகாத்மா நீ வாழ்க, வாழ்க!” என்ற பாரதி யின் பாடல்களைப் பாடிக் கதறினேன். அன்று நான் பிழைத்ததே ஆண்டவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்...இரவு 12 மணிக்கு, கடமையை நிறைவேற்றிய உணர்வோடு கோவை வந்து சேர்ந்தோம்.

அகிலனின் ‘புயல்’ அரங்கேற்றம்

தமிழ் நாடகப் பரிசுத் திட்டத்தில் வந்த நண்பர் அகிலன் அவர்களின் புயல் நாடகத்தினைக் கோவையில் அரங்கேற்றவிரும்பினோம். எங்கள் அழைப்பினை ஏற்று அகிலன் கோவைக்கு வந்தார்.