பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இதழ் தோறும் விதம்விதமான போட்டிகளை அறிவித்து, பரிசு வழங்குதல் பகுத்தறிவுப் போட்டி - குறுக்கெழுத்துப்போட்டி என்று பெறும் தொகை பரிசுகள் அளித்தல்; முக்கிய ஊர்களில் இலவசமாகப் பிரதிகளை விநியோகித்து வாசகர்களைக் கவர்ந்து இழுத்தல் - இவை சில.

இவற்றுடன், சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி என்று ஏற்படுத்தி, எழுத்தாளர்களையும் அவர் ஊக்குவித்தார். ஆனந்த விகடனில் பிரசுரமாகும் எழுத்துகளுக்குப் பணம் வழங்கியும் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தினர்.

அதே சமயத்தில், ‘ஆனந்தவிகடன்’ தமிழ் இலக்கிய உணர்வு வளரவும் தன்னாலியன்ற அளவு பணிபுரிந்திருக்கிறது. பி.ஜி ஆச்சார்யா எழுதி வந்த கம்பராமாயணக் கட்டுரைகள் பெரும்பாலருக்கு அக்காவியத்தின் சிறப்பை உணரச் செய்தன.

முதலில், "கம்பசித்திரம்’ என்ற தலைப்பில் பி. ஜீ. எழுதினார். சேகர் எனும் சிறந்த ஓவியர் தீட்டிய சித்திரங்கள் அவற்றுக்கு அழகும் பெருமையும் சேர்த்தன. பிறகு, சில ஆண்டுகள் கழிந்ததும் சித்திர இராமாயணம் என்ற தலைப்பில் ராமாயண விளக்கம் அவரே எழுதினார். அப்போது ‘சித்திரலேகா’ என்ற ஓவியர் வரைந்த தனிரகச் சித்திரங்கள் அவற்றை அழகுபடுத்தின.

சங்க காலத் தனிப் பாடல்களுக்கு அழகிய விளக்கங்கள் எழுதி, அட்டையில் ஓவியம் அச்சிட்டு, சங்க இலக்கியத்தை அறிமுகம் செய்த பெருமையும் விகடனுக்கு உண்டு. புதுமையான, தரமான, நல்ல கதைகளையும் விகடன் நிறையவே பிரசுரித்துள்ளது அந்தக் காலத்தில்.