பக்கம்:ஐந்திணை வளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஐந்திணை வளம் காமத்தால் அறிவிழந்து செயலினை மேற்கொள்ளாது போயினான்’ என்னும் ஊரவரின் பழிப்புக்கு ஆளாகலாமோ? ஆகவே, எனக்குவிடைகொடு போய் வெற்றியுடன்வாருங்கள் என்று நின் வாயைத் திறந்து வாழ்த்தி அனுப்பு’ என்று, அவன் அவளை வேண்டுகின்றான். ‘என்னை ஏன் இப்படி வருத்துகின்றீர்கள்? என்ன செய்வதென்றே தோன்றவில்லையே? எப்படி உங்களைப்பிரிந்து என்னால் இருக்க முடியும்? என்கிறாள் அவள். “நின்னைப்போல் எவ்வளவு பெண்கள், தம் கணவன்மாரைச் செயலினை முடித்துவர அனுப்பிவிட்டு, அந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு பெருமை அடைகின்றனர். தமிழ் மரபினளான நீ தகைமிக்க குடும்பத்துப் பிறந்த நீ இப்படிக் கலங்கலாமா? என்று அவன் அவளுக்குச் சமாதானம் கூறுகின்றான். இப்படிப் பிரிவதற்கு இயலாத மனத்துயரோடு அவளைத் தேற்றித் தெளிவித்துக் கார்காலம் தொடங்கியதும் தவறாமல் வந்து விடுவதாக உறுதிகூறி, அவன் சென்று விடுகின்றான். அவளும், எப்படியோ தன் உள்ளத்து ஆசைகளை எல்லாம் அடக்கிக்கொண்டு, அந்தப் பிரிவினைப் பொறுத்திருந்தாள். ஆனால், கார்காலத்தின் அறிகுறிகள் தோன்றக் கண்டதும் அவள் நெஞ்சம் கட்டவிழ்ந்து கரைகின்றது. அவள் துயரம் நொடிக்குநொடி மிகுந்து கொண்டே போகின்றது. அமைதி கொண்ட நிலையெல்லாம் குமுறும் நிலையாகிக் கொந்தளிக்கின்றது. அவள் உள்ளம் கொண்டவேதனையால், உடல்நலமும் கெடுகின்றது. தலைவியின் வேதனைமிகுதியைக்கண்டதோழி, தானும் மிகவும் மனங்கலங்கித் துடிக்கின்றாள். தலைவியை அணுகித் தேறுதல் கூறவும் முற்படுகின்றாள். அப்பொழுது தலைவி சொல்லுகின்றாள்: - “செம்மையான கதிர்களைக் கொண்டவன் கதிரவன். அவன் சினங்கொண்டு உலகினை எரித்தான். அந்தச் சினத்தை மறைத்துக்கொண்டபொழுதுதான்மாலைப்பொழுது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/44&oldid=761845" இலிருந்து மீள்விக்கப்பட்டது