பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனிதனுக்கே வெற்றி
        நிரந்தரமாய் பனி மூடியிருக்கும் உயர்ந்த மலைகளை வரம்புகளாகக் கொண்டு அமைந்திருந்தது சாந்திமய நீலனர். நந்தவனங்களின் கரிய இலைத் தொகுப்புகள் நீரோரம் வரை வனம் நிறைந்து அலை பாய்ந்து கிடந்தன. சர்க்கரைக் கட்டிகளால் அமைக்கப் பெற்றவை போல் தோன்றும் வெள்ளைநிற வீடுகள் நீரினுள் எட்டிப் பார்த்தபடி நின்றன. குழந்தையின் இனிய துயில் போல் குடியிருந்தது அமைதி.
       காலை வேளை. மலர்களின் நறுமணம் மலைப் புறங்களிலிருந்து மிதந்து வந்தது. அப்பொழுதுதான் சூரியன் உதயமாகியிருந்தது. மரங்களின் இலைகள், புல் வரிசைகள் மீதெல்லாம் பனித்துளிகள் இன்னும் பளபளத்துக் கொண்டிருந்தன. மலைகளின் மோன நெளிவுகளிடையே எறிந்த சாம்பல் வர்ண ரிப்பன் போலக் கிடந்தது ரோடு. கற்கள் பரவிய பாதைதான்; ஆயினும் தொட்டால் பட்டுப் போல் மென்மையாகயிருக்குமோ என்ற மயக்கம் விளைவிக்கும் தோற்றம் பெற்றிருந்தது.
       கரடு முரடான கருங்கற் குவியல் ஒன்றின் அருகிலே, கருவண்டு போல் கறுத்திருந்த தொழிலாளி ஒருவன் உட்கார்ந்திருத்தான். ஆண்மையையும் அன்பையும் சித்தரித்தது அவன் முகம். மார்பிலே ஒரு மெடல் அணிந்திருந்தான் அவன்.
       உழைப்பினால் உரமேறிய கைகளைத் தன் முழங்கால்களில் ஊன்றி ஒய்ந்திருந்த அவன் தலைநிமிர்ந்து நோக்கினான். செஸ்கட் மாத்தடியில் நின்ற வழிப்போக்கனின் முகத்தையே கவனித்தான்.
       "வலிம்ப்ளான் டன்னல் வேலையில் எனது உழைப்பைப் பாராட்டி அளிக்கப்பட்ட மெடல் இது" என்று சொன்னான்.