பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மனதிலே ஒரு நிறைவு, முகத்திலே மகிழ்ச்சி, நடையிலே ஒரு புது வேகம் என்றுமில்லாத ஒரு புதிய தெம்புடன் மீனாட்சி வீட்டுக்குள் நுழைவதை, வாசலில் நின்று கொண்டிருந்த தருமலிங்கம் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவளின் அருகிலே வந்தார்.

இவ்வாறு மகிழ்ச்சியாக மீனாட்சி இருக்க வேண்டும் என்பதுதானே தருமலிங்கத்தின் ஆசை! ‘வெளியில் ஏதோ நடந்திருக்கிறது. அதனால் தான் மீனாட்சி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள்’ என்று புரிந்து கொண்டார் தருமலிங்கம், தன்னிடம் வந்து கேட்பதற்கு முன்னே, மீனாட்சி முந்திக் கொண்டாள்.

தன் கையிலிருந்த கோயில் பிரசாதத்தைக் கணவனிடம் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்து வணங்கி எழுந்தாள்.

‘என்ன விசேஷம்’ என்று கேட்பது போல, தருமலிங்கம் தனது விழிகளின் புருவங்களை மேலே உயர்த்தியவாறு நின்றார்.

கோயிலில், அம்பிகை முன்னால் தான் வேண்டிக் கொண்டதையும், கோயில் மணி அசரீரீபோல ஒலித்ததையும், நமக்கு நிச்சயம் நல்ல வழி பிறக்கும் என்று தான் நம்புவதாயும், மினாட்சி