பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


அந்நோயாளிக்கு ஊசி மூலம் நீர் ஏற்றப்படுகிறது; இல்லா விடின், குருதியோட்டம் தடைபட-அடைபட நோயாளி இறந்து போக நேரிடும். தண்ணிர் வெளியிலிருந்து வாய் வழியாகக் குடிக்கப்படுகிறது; வியர்வையாகவும் சிறு நீராகவும் தண்ணிர் வெளிவருகிறது. ஒரு பிடி பொரி மரவை வாயில் போட்டால், அதை அரைத்துக் கரைத்து உள்ளே அனுப்ப வாயிலிருந்து எவ்வளவோ நீர் சுரக்கிறது; உணவுப் பொருளைக் கண்டதும் நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொல்வதும் உண்டு. எனவே, இவற் றைக் கொண்டு, உடம்பில் நீர்க்கூறு உள்ளமை தெளிவாகும்.


இறுதியானது மண் ; உடம்பின் தசைப் பகுதிகள் மண்ணின் கூறு எனலாம். மண்ணில் என்னென்னவோ முளைக்கின்றன; அதுபோல, நகமும் மயிரும் முளைத்து வளர்வதைக் கொண்டு உடம்பில் மண்ணின் கூறு இருப்பது தெளியப்படும். அவ்வளவு ஏன்? உடலை (பிணத்தை) மண்ணுக்குள் புதைத்தால், அது மக்கி மண்ணோடு மண்ணாய் விடுவது கண் கூடாகும். -


மேற்கூறிய விளக்கங்களால், உடம்பு ஐந்து முதல் (மூலப்) பொருள்களின் திரிபு என்பது விளங்கும். இது சார்பான குறிப்பு ஒன்றைக் குடபுலவியனார் என்னும் தமிழ்ப் புலவரும் ஒரு பாடலில் கூறியுள்ளார். அப் பாடல் புறநானூறு என்னும் தமிழ் நூலில் உள்ளது. ‘தண்ணிர் இன்றி உடம்பு இல்லை; உடம்புக்கு இன்றி யமையாததான உணவு தந்தவர் உயிர் தந்தவராவர்; உணவு எனப்படுவது மண்ணும் தண்ணிரும் சேர்ந்தது; அந்த மண்ணும் தண்ணீரும் கலந்தவரே உடம்பும் உயிரும் பெற்றவர் ஆவார்’-என்பது புலவரின் பாடல் கருத்து: