பக்கம்:கண் திறக்குமா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

109

அப்போது, “அழகான தங்கையைப் பார்த்துவிட்டுப் போக வந்துவிட்டானாக்கும்!” என்று மாமி சமையல் அறையில் இருந்தபடி முனகியது என் காதில் விழுந்தது.

‘என்னுடைய அழகான தங்கையை மட்டுமா, உங்களுடைய அழகான பிள்ளையையும் பார்த்துவிட்டுப் போகலாமென்று தான் வந்திருக்கிறேன்!’ என்று நானும் பதிலுக்கு முனகிக்கொண்டே அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன்.

நான் அவ்வாறு முனகியது எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த என் மாமாவின் காதில் விழுந்துவிட்டது. ‘ஏன், அவனுடைய அழகுக்கு என்னடா குறைவு?’’ என்று கேட்டுக் கொண்டே, அவர் எனக்கு எதிர்த்தாற் போலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

‘ரொம்ப அழகுதான்; ஊர் சிரிக்கிறது!’

‘ஏன் சிரிக்கிறது. என்னத்துக்காகச் சிரிக்கிறது?’

‘ஓர் அபலையின் உயிருக்கு உலை வைத்ததற்காக!”

‘அது யார், அந்த அபலை?”

‘ஒன்றும் தெரியாதவர்போல் கேட்கிறீர்களே, அவளுடைய தாயார் கூட இங்கே வேலை செய்துகொண்டிருக்கவில்லையா?”

“ஆமாம், நாலு கழுதைகளோடு ஐந்தாவது கழுதையாக ஏதோ ஒரு கழுதை இங்கே வேலை செய்து கொண்டுஇருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னால் அந்தக் கழுதையின் வேலை எங்களுக்குப் பிடிக்கவில்லை; விரட்டி விட்டோம் - அதனால் என்ன?”

‘ரொம்ப சரி; அவளுடைய மகள் செங்கமலத்தின் வாழ்க்கையை உங்கள் மகன் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டானே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/112&oldid=1379032" இலிருந்து மீள்விக்கப்பட்டது