பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 129 “மும்மையாம் உலகம் தந்த முதல் வற்கும் முதல்வன், தூதாய்ச், செம்மையால் உயிர் தந்தாய்க்குச், செயல் என்னால் எளியது உண்டோ? அம்மையாய் அத்தனாய, அப்பனே! அருளின் வாழ்வே! இம்மையே, மறுமை தானும் நல்கினை இசையோடு; என்றாள்' என்பதும் கம்ப நாட்டாழ்வாருடைய திவ்யமான பாடலாகும். பின்னர் ஜானகி அனுமனிடம் “வீரன் தன் இளவலோடு எங்கே இருக்கிறான், எவ்வழி எய்திற்று உன்னை? நான் இங்குள்ளது பற்றிய செய்தியை எப்படி அறிந்தீர்கள்' என்று விவரங்களைக் கேட்டாள். சீதையைத் தேடி வரும் போது இராமனும் இலக்குவனும் சடாயுவைக் கண்டது முதல் சுக்கிரீவனுடன் நட்புக் கொண்டு, வானர வீரர்கள் சீதையைத் தேடிச் சென்றுள்ளது வரை எல்லாச் செய்திகளையும் சீதையிடம் அனுமன் விவரமாக எடுத்துக் கூறினான். சீதை மகிழ்ச்சியடைகிறாள். அனுமனுடைய ஆற்றலைப் பாராட்டுகிறாள். அனுமன் பிராட்டியிடம் “தானே, அவளைச் சுமந்து கொண்டு போய் இராமபிரானிடம் சேர்ப்பேன்’ என்று கூறுகிறான். சீதை அதை மறுத்து “அது சரியாகாது, அது இராமபிரானுக்கும் அவனுடைய வில்லுக்கும் வீரத்திற்கும் இழுக்காகும்” "அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ, எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன், அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்” என்று கூறி நீ கவலை கொள்ள வேண்டாம் நீ போய் நாயகனிடம் என் நிலைமைப் பற்றிக் கூறுவாயாக. விரைவில் வந்து என்னைச் சிறை மீட்கும்படி கூறுவாயாக என்று கூறித் தன்னைக் கண்டு பேசியதன் அடையாளமாகச் சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். அத்துடன் தன் கவலையுடன் சேர்த்து சில செய்திகளையும் சொல்லி அவைகளைத் தன் நாயகனிடம் கூறும்படி சொன்னாள்.