பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 251 கூறிக் கானகம் செல்வதற்குக் கைகேயியிடம் விடையும் பெற்றுக் கொண்டு கோசலையின் கோயிலுக்குச் சென்றான். கோசலையோ 'பரதன் முடி சூடுகின்றான்' என்று கூறிய போது எந்த வித வேறுபாடும் இன்றி மகிழ்ச்சியே அடைந்தாள். ஆனால் இராமன் காட்டிற்குச் செல்கிறான் என்று கேள்விப்பட்ட போது மனம் கலங்கினாள். மயங்கினாள். அவளை இராமன் கைத்தலத்தில் தாங்கி அரும் கற்பினோய் நமது வேந்தனைப் பொய்யனாக்குதியோ’’ என்று கூறித் தேற்றினான். இராமன் கானகம் போகிறான் இராமன் கானகம் போகிறான் என்று கேள்விப்பட்ட போது அயோத்தி மக்கள் அனைவரும் அழுது புலம்பினர். அந்தணர் அருந்தவர் அவனி காவலர் நகர் உளார் நாட்டுளார்கள், தேவர் உள்ளமும் வெந்தனர் என்றும், அறுபதினாயிரர் அரசன் தேவியர் மறுவறு கற்பினர், மழைக்கண் நீரினர், சிறுவனைத் தொடர்ந்தனர், திறந்த வாயினர், எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினர்’ என்று கம்ப நாடர் குறிப்பிடுகிறார். இராமன் வனம் செல்கிறான் அதைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் தனது ஈடு இணையற்ற தமிழ்ச் சொற்களில் "தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும் மையறு கருணையும், உணர்வும், வாய்மையும் செய்யதன் வில்லுமே சேமமாகக் கொண்டு ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே” என்று குறிப்பிடுகிறார். பொருள் பொதிந்த இப்பாடல் வரிகளில் சீதையின் கற்பு தன் பெருந்தன்மை, தம்பி இலக்குவன், கருணை, நல்லுணர்வு, வாய்மை, தனது வில், ஆகியவைகளையே பாதுகாப்பாகக் கொண்டு இராமன் வனம் சென்றான், என்று கம்பன் கூறுகிறார். இதில் சீதையின் கற்பும் அவர்களின் பாதுகாப்பு சாதனங்களிலே ஒன்றாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சீதா பிராட்டியின் அந்தக் கற்பு நிலை அனைத்துச் சோதனைகளையும் தாங்கித் தாண்டிக் கடந்து நிற்பதைக் கதையில் காண்கிறோம்.