பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 111 “வாங்கரும்பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான், தீங்கவிச் செவிகள் ஆரத்தேவரும் பருகச் செய்தான் ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்னயான் மொழியல் உற்றேன்” என்று குறிப்பிட்டிருப்பது, அவர் தனது கதைக்கு வால்மீகியையே பெரும்பாலும் ஆதாரமாகக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது. ஆயினும் அவர் அக்காலத்தில் நிலவியிருந்த பல நூல்களையும் இராம காதைக் குறிப்புகளையும் படித்தும், அறிந்தும், ஆய்வு செய்தும் அவைகளைத் தனது கதையில் தேவையான அளவில் தனதாக்கிக் கொண்டார் என்பது புலனாகிறது. கம்பருடைய இராமாயணம் அல்லது இராமாவதாரம் என்னும் காவியம், வால்மீகி ராமாயணத்தை அப்படியே தழுவியது என்றோ, அல்லது அப்படியே அதன் மொழிபெயர்ப்பு என்றோ கூற முடியாது. காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு கம்பர் தனது தனித்தன்மை யான புலமையுடனும் கவித்திறனுடனும் அபாரமான கற்பனைத் திறனுடனும், கல்விஞானத்துடனும், அனுபவச் செழுமையுடனும், அறிவாற்றலுடனும், தனது காவியத்தை ஒரு மூல நூலைப் போலவே எழுதி முடித்துத் தமிழ் மொழிக்குத் தனது மிகப் பெரிய அளப்பறிய பங்கை ஆற்றியுள்ளார். பங்களிப்பைச் செய்துள்ளார். கம்பருடைய இராமாயணம் உலகத் தரத்திலான பெருங் காவியமாகும். பேரிலக்கியமாகும். கம்பரையும் வாலிமீகியையும் ஒப்பிட்டும், கம்பரையும் பல பிரபலமான மேலை நாடுகளின் கவிஞர்களையும் ஒப்பிட்டும் பல ஆய்வு நூல்களையும் பல தமிழ் ஆங்கில இலக்கிய அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். மேலை நாடுகளில் அந்தந்த நாட்டு மக்கள், தங்கள் தங்கள் நாட்டுப் புலவர்களையும் கவிஞர்களையும் பெரும் எழுத்தாளர்களையும் போற்றிப் பாராட்டிப் பல விழாக்களும் எடுத்து அவர் புகழ் பரப்பி வருகிறார்கள். பிறந்த நாட்களை நாடெங்கும் கொண்டாடுகிறார்கள். அவர்கள் நாட்டு அறிஞர்களை உலக அளவிற்கு உயர்த்துகிறார்கள். உதாரணமாக பிரிட்டனில் மில்டன், சேக்ஷ்பியர், பிரான்சில் விக்டர் ஹியூகோ, ஜெர்மெனியில் தாந்தே, ரஷ்யாவில் புஷ்கின், டால்ஸ்டாய் போன்றவர்களை அந்தந்த நாட்டு மக்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள். அவர்களைப் பற்றிப் பல கருத்தாய்வுகளையும் விழாக்களையும் எடுத்து வருகிறார்கள்.