பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 17() இவ்வாறு பரதன் சிறப்பாகக் கூறப்படுகிறான். இராமனுக்குத் தலை சிறந்த தம்பியாக, தியாகத்தின் சின்னமாகக் கடமை தவறாத கண்ணியனாக, அறிவிலும் அறத்திலும் சிறந்தவனாகக் கூறப்படுகிறான். பரதன் குகனிடம் விவரம் கேட்டுத் தென்திசையை நோக்கி வருகிறான். பரத்துவாச மாமுனியைக் காண்கிறான். பரத்துவாசர் பரதனை வரவேற்று, அவனுடைய கோலத்தைக் கண்டு, " மாமுடி சூடி அரசுப் பொருப்பேற்காமல், மரவுரிதரித்து வந்துள்ள காரணம் யாது?’ எனக் கேட்டார். முறையின் நீங்கி முதுநிலம் கொள்கிலேன். என்று பரதன் பதில் கூறுகிறான். “இராமன் திரும்பி வந்து ஆட்சிப் பொறுப்பையேற்காவிட்டால் நானும் அவனுடன் காட்டிலேயே தங்கிவிடுவேன்” என்று கூறி பரத்துவாசருடைய ஆசிரமத்தில் தங்கிவிட்டு மறுநாள் சித்திரக் கூடம் நோக்கிப் புறப்பட்டான். பரதனையும் படை பரிவாரங்களையும் தொலைவில் பார்த்த இலக்குவன் தங்கள் மீது பரதன் படையெடுத்து வருகிறான் என்று தவறாகப் புரிந்து கொண்டு சீறுகிறான். குதிக்கிறான். தரையில் ஓங்கி மிதிக்கிறான். “மதித்திலான் பரதன், நம்மீது படை திரண்டு வருகிறான். நான் விட மாட்டேன். நீ வனம் சென்ற போது கோசலை அழுததைப் போல அந்தக் கையேயியையும் அலறவைப்பேன்’ என்றெல்லாம் ஆவேசமாகப் பேசுகிறான். அப்போது இராமன் அவனை அமைதிப் படுத்துகிறான். "இலக்குவ, ஈறேழு பதினான்கு உலகங்களையும் கலக்கும் திறன் உனக்கு உண்டு என்பதும் உன்னை யாராலும் தடுக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆயினும் ஒன்றை மறந்து விடாதே! நம் குலத்தில் பிறந்தோர் யாரும் தருமத்திலிருந்து விலகமாட்டார்கள். பரதனைத் தவறாக நினைக்காதே. அவன் பெருமகன். அவன் செம்மையின் ஆணி. சற்று பொருத்துப் பார்” என்று இராமன் இலக்குவனை அமைதிப்படுத்தினான். இங்கு கம்பனுடைய அருமையான உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட வார்த்தைகளாக இராமன் வாயிலாக வருகின்றன, மிக உயர்ந்த இலக்கியச் சிறப்பு வாய்ந்த சொற்களாக அவை வெளிப்பட்டிருக்கின்றன என்பதையும் காண்கிறோம்.