பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப்-பார்வை-அ-சீனிவாசன் 193 “பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்மகள் நைந்துயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா உயந்தனன், இருந்தனன் உண்மை காவலன் மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய்; எனா” என்று இலக்குவன் கூறுவதைக் கம்பன் கவிதை குறிப்பிடுகிறது. இலக்குவனுடைய இந்தக் கண் கலங்கிய வார்த்தைகளைக் கேட்டவுடன் இராமனுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் எழவில்லை. இலக்குவனுடைய துயரம் தோய்ந்த முகத்தையும் நீர் நிறைந்த கண்களையும் பார்த்துக் கொண்டு இராமன் அப்படியே வாயடைத்து நின்று விட்டான் என்று கம்பன் கூறுகிறார். “உரைத்தபின் இராமன் ஒன்றுரைக்க உன்னிலன் வரைத்தடம் தோளினான் வதனம் நோக்கினான் விரைத்தடம் தாமரைக் கண்ணை மிக்கநீர் நிரைத்திடை இடைவிழ நெடிது நிற்கின்றான்.” இங்கு இராமனுக்கும் இலக்குவனுக்குமிடையில் உள்ள சகோதர பாசம், இலக்குவனுடைய சகோதர பக்தி பாசம், அன்பு, சேவை உணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கம்பன் மிக அழகாகச் சித்தரித்துக் காட்டுவதைத் தெளிவாகக் காண முடிகிறது. இராமனும் சீதையும் இலக்குவனும் வனம் செல்லப் புறப்பட்டனர். அயோத்தி மக்கள் பார்த்து விட்டால் பின் தொடர்ந்து வந்து விடுவார்கள் எனக் கருதி நடு இரவிலே அயோத்தி நகரைக் கடந்தனர். சுமந்திரன் அவர்களைக் காட்டிற்குச் செல்லும் வழியில் விட்டு விட்டு விடை பெறுகிறான். அயோத்தியில் அரண்மனையில் உள்ளவர்களுக்கு என்ன செய்தி கூற வேண்டும் என்று. இராமனையும் சீதையையும் கேட்கிறான், பின்னர் இலக்குவனைக் கேட்கிறான், இலக்குவன் மகிழ்ச்சியாக இல்லை, மனவருத்தம் நிரம்பியே நின்றான். அவன் இராமனுடைய ஆணைக்கு அடங்கினானேயல்லாமல் அவனுடைய சினம் கொதிப்படைந்த உள்ளம் இன்னும் அடங்கவில்லை.