பக்கம்:கல்வி எனும் கண்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

31


எவ்வளவு முன்னேறும் என எண்ணி நான் வருந்திய நாட்கள் பல. என் நூலில் (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்) இது பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டியுள்ளேன். இங்கும் பலர் உள்ளனர். அவர்கள் குமுறலோடு வேலை செய்வதையும் அறிவேன். அதனால் பல துறைகளில் வேலைகள் மந்தமாவதோடு முறையற்றதாகவும் அமைகின்றன. கல்வித் துறையிலேயே முறையாக மேலே வரவேண்டிய ஒருவரைத் தள்ளி வேறொருவரை உயர்த்தியதை அவர் சொல்லிச் சொல்லிக் கண்ணீர் விடுகிறார் எனக் கேள்விப்படுகிறேன். இந்த நிலை, நாட்டில் நீங்கினால் ஒழிய, ஆயிரம் கோடி கோடியாக நாம் கல்விக்குச் செலவிடும் தொகை யாருக்கோ தான் பயன்படுவகையில் அமையும், இதை நம் நாட்டு அரசு நன்கு எண்ணி, தக்கதின்ன தகாதன இன்ன என்று ஆய்ந்து செயல்படல் நன்று.

நாற்பத்தைந்தாண்டுகளுக்குமுன் கல்வித் துறை மாவட்டக் கழகத்தின்கீழ் நன்கு செயல்பட்டு வந்தது. ‘District Board’ என்றும் ‘Taluk Board’ என்றும் மாவட்டங்கள், வட்டங்கள்தொறும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயல்புரிந்தன. கல்வி, சுகாதாரம், சாலை போன்ற முக்கிய துறைகள் அக்கழகத்தின் வசம் இருந்தன. அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் நாற்பது அல்லது ஐம்பது கிராமத்திற்கு எனத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொருவரும் சிறு அளவில் உள்ள தம் எல்லையினை அடிக்கடி பார்வையிட்டு, மக்கள் தேவை அறிந்து திங்களுக்கு ஒரு முறை நடக்கும் கழகக் கூட்டத்தில் அத்தேவைகளை வற்புறுத்தி மக்களுக்கு வேண்டியவற்றைச் செய்துவந்தனர். அதிகாரம் இவ்வாறு பரவலாக இருந்ததோடு, உறுப்பினரும் தம் எல்லையைச் சார்ந்தவராக இருந்ததால் மக்களும் அவர்களிடம் விரும்பிச் சென்று தத்தம் குறைகளை முறையிடுவர். மற்றும் ஊர்தொறும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் சிறக்கப் பணியாற்றுகின்றனரா என மேற்பார்வை பார்க்கவும் வசதியாக இருந்தது. வைத்திய வசதிகளும் சாலை வசதிகளும்