பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

போது, பிரிந்து வருந்தும் தலைவிக்கு அவ் வருத்தம் தீரும்படி “இவர் பகையை வென்று விரைவில் வருவாராக” என்று வெற்றி தரும் தேவதையைப் போற்றுபவர் கூறும் முறையில் நக்கீரரால் பாடப்பட்டது. இதன் மூலம் இப் பாட்டுடைத் தலைவருக்கும் தலைவிக்கும் இருக்கும் உண்மைக் காதல் அன்பு தெற்றத் தெளியப் புலனாகும். இதன் விரிவை அப் பெருநூலில் காண்க. விரிப்பின் அது பரந்து படும் என்று இந்த அளவில் இது குறிப்பிடப்பட்டது.

இனி இம் மன்னர் ஏறு, பிற புலவர்களால் பாடப்பட்ட பெருமை நிறைந்ததோடு நில் லாமல் தாமாகப் பாடியுள்ள பாட்டின் பொருள் நயம் கண்டு இவரது வரலாற்றுச் சுருக்கத்தை இனிதின் முடிப்போமாக.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுந்செழியர் பாடல் ஒன்று புற நானூற்றில் காணப்படுகிறது. அப்பாடல் இவரது உள்ளக்கிடக்கையின் உண்மையினை உணர்த்துவதாகும். பாட்டின் வேகம் இவரது விறு விறுப்பைக் காட்டவல்லது. அது சபதம் செய்யும் நிலையில் அமைந்த பாடல்.

பகை வேந்தர் தம்மை வெல்ல எண்ணவும் கூடாது என்பது இவரது கருத்து. இவரது யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை கண்டு பகைவர் அஞ்ச வேண்டும் என்பதும், இவர் கருத்து. அங்ஙனம் அஞ்சாது தம்