பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன்னு மச்சான்

57

பட்டுப் புடவை வாங்கி வாரேன் பொன்னுப் பூங்குயிலே
கட்டிப்பாத்தா நல்லாயிருக்கும் பொன்னுப் பூங்குயிலே
ரோசாப் பூவும் வாங்கிவாரேன் பொன்னுப் பூங்குயிலே
ரொம்ப உனக்கு நல்லாயிருக்கும் பொன்னுப்

பூங்குயிலே

அவள் பொன்னுப் பூங்குயில்; அவன் பொன்னு மச்சான். அவர்களுடைய அன்பின் பெருமையை மேலேயுள்ள பாடலிலே பார்த்தோம்.

வேறோரு பூங்குயிலுக்கும் பொன்னு மச்சானுக்கும் இடையே வளர்ந்துள்ள அன்பையும் அதற்கு இடையூறாக நிற்கும் உறவினர்களைப் பற்றியும் மற்றொரு பாடலிலே காண்போம்.

ஒருத்திக்குத் தன் அத்தை மகனிடத்திலே அன்புண்டு. ஆனால், என்ன காரணத்தினலோ அவளுடைய அண்ணன் தம்பிகள் அவளை அத்தை மகனுக்குக் கலியாணம் செய்து கொடுக்க இசையவில்லை.

அந்த மங்கை தன்னுடன் பிறந்தவர்களிடமும் மாறாத அன்புடையவள். அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஒரு நாளும் நடக்கமாட்டாள். அண்ணனும் தம்பியும் அவளிடத்திலே கொண்டுள்ள அன்பையும் அவள் அறிவாள். அவர்களுடைய அன்பிலே வளர்ந்தவள் அவள். தன்னைத் தன் அண்ணன் தம்பிகள் அன்போடு வைத்து வளர்த்த தென்னம் பிள்ளையாக அவள் கருதுகிறாள். ஆதலால் அவள் அவர்களுடைய எண்ணத்திற்கு விரோதமாக ஒரு நாளும் நடக்க மாட்டாள். அதை அவள் குறிப்பாக ஒரு பாடலிலே அத்தை மகனுக்குத் தெரிவிக்கிறாள்: