பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

திருமலை ராயன்

தஞ்சை மாவட்டத்துக் கடற்கரையோரத்தே, நாகைக்குச் சில கல் தொலைவிலே விளங்கும் திருமலைராயன் பட்டினம் என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு, அந்நாளையிலே ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் திருமலைராயன்.

விஜயநகர மன்னர்கட்கு உட்பட்ட தலைவனாக அவன் அந்தப் பகுதியை ஆண்டு வந்தான் (கி.பி.1455-1468). அவன் தெலுங்கு மொழியினன். எனினும் அவன்பால் தமிழார்வமும் நிரம்ப இருந்தது. தமிழ்ப் புலவர்கள் பலரைத் தன் அவையிலே வைத்து அவன் உபசரித்து வந்தான்.

அவனுடைய தமிழன்பின் சிறப்பையும், வள்ளன்மையினையும் கேட்டறிந்தார் காளமேகம். தாமும் சென்று அவனைக் காணவும், அவனைப் பாடி பரிசில் பெற்று வரவும் விரும்பினார். அந்த விருப்பத்தைச் செயற்படுத்துவதற்கான தக்க நேரத்தையும் எதிர்பார்த்திருந்தார்!

தண்டிகைப் புலவர்கள்

மேற்சொன்ன திருமலைராயன் அவையிலே, அறுபத்து நான்கு புலவர்கள் 'தண்டிகைப் புலவர்கள்’ என்ற சிறப்புடன் திகழ்ந்தனர். அரசனால் அளிக்கப்பெற்ற விருதான பல்லக்குகளிலே அமர்ந்து அவர்கள் செல்வார்கள். அதனால் தண்டிகைப் புலவர்கள் ஆயினர். அந்தச் சிறப்பும் செழுமையும் அவர்களிடத்தே புலமையைக் காட்டினும் செருக்கினையே பெருக்கிக் கொண்டிருந்தன. தம் அரசனின் உதவியை நாடி வரும் பிற புலவர்களை எல்லாம் வஞ்சகமாக மடக்கிக் தலை கவிழச் செய்து, அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.

வறுமையிலே வாடி அரசனின் உதவியை எதிர் பார்த்தவர்களாகவும், புலமையால் அரசனிடத்தே பரிசு பெறுவதை விரும்பியவராகவும் வந்த புலவர்களுட் பலர், இந்தத் தண்டிகைக் கூட்டத்தினரின் செயலினால் மனங் குன்றி, யாதும் பெறாதே வருத்தமுடன் திரும்பிச் செல்வாராயினர். இந்த கும்பலின் கொடுஞ்செயல் பற்றிய செய்தி தமிழகத்தின் எப்புறத்தும் பரவி இருந்தது. 'இவர்கள் செருக்கினை அடக்கி இவர்களுக்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும்' எனக் காளமேகம் நினைத்தார்.

அதிமதுரக் கவி

இந்தத் தண்டிகைப் புலவர்களின் தலைவராகத் திகழ்ந்தவர் அதிமதுரக் கவிராயர் என்பவர். மிகவும் இனிதான கவிதைகள் இயற்றலிலே வல்லவர் அவர். அதனால் அரசன் அவருக்கு மனமுவந்து அளித்த விருதே 'அதிமதுரக் கவிராயர்’ என்பது.