பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் ஆனை குதிரைதரு மன்னைதனைக் கொன்றகறி சேனை மன்ன ரைக்காய்துன் னியவரை-பூநெயுடன் கூட்டியமு திட்டான் குருக்களம ராபதியான் வீட்டிலுண்டு வந்தேன் விருந்து. (194) “குருக்கள் மரபினைச் சேர்ந்தவரான அமராபதியார் என்பவரின் வீட்டிலே இன்று விருந்து உண்டு வந்தேன். ஆனை - அத்திக்காய்: குதிரை - மாங்காய்; தருமன்னை தனைக்கொன்ற கறி - வாழைக்காய்; சேனை - சேனைக் கிழங்கு; மன்னரைக்காய் - நெல்லிக்காய்; அவரை - அவரைக்காய், ஆகியவற்றால் துன்னி உண்பதற்கான கறிவகையினைச் செய்து, பூநெயுடன் - மணக்கும் நெய்யுடன், கூட்டி அமுத்திட்டான் சேர்த்து எனக்கு அவன் அமுது இட்டனன்". மேலெழுந்தபடி பார்த்தால், “ஆனைக் கறியும், குதிரைக் கறியும், பெற்ற தாயைக்கொன்ற கறியும், படைமன்னரைக் கொன்ற கறியும், பூனைக் கறியுடனே சேர்த்து உணவளித்தான்” என்று தோன்றும் நயத்தினை அறிக. பூசுணிக்காய்கறி கொண்டத்துரிலே ஒரு வீட்டிலே உணவருந்தினார் கவிஞர். பூசுணிக்காய்க் கறி மிகவும் சுவைகேடாயிருக்க, அதனைப் பழித்து இப்படிப் பாடுகிறார். கண்டக்காற் கிட்டுங் கயிலாயங் வைக்கொண்டுட் கொண்டக்கால் மோட்சம் கொடுக்குமே-கொண்டத்துர் தண்டைக்கா லம்மை சமைத்துவைத்த பூசணிக்காய் அண்டர்க்கா மீசருக்கு மாம். (195) "கொண்டத்துரிலே இருக்கும், தண்டை அணிந்த கால்களை யுடைய இந்த அம்மை சமைத்து வைத்த பூசுணிக்காய்க் கறியினைப் பார்த்த பொழுதிலோ கயிலாயத்தை அடைவதாகத் தோன்றும்; கையிலெடுத்து உண்டுவிட்டாலோ மோட்சத்தையே கொடுத்து விடும்; இது தேவர்களுக்கும் ஈசர்க்குமே பொருத்தமானதாகும்.” “பார்த்தாலே உயிர் போய்க் கொண்டிருப்பதுபோன்ற பிரமை ஏற்படும்; உண்டாலோ உயிரே போய்விடும்; தேவர்கள் பாற்கடலை விரும்பிக் கடைய, அங்கே ஆலக்கால விஷம் எழுந்தது; அதனால், அவர்கட்கு ஒருவேளை இது பிடிக்கலாம்; அந்த நஞ்சை உண்டானே ஈசன். அவனுக்கும் இது பிடிக்கலாம்' என்பது கருத்து. கறியை வியந்து பாடியதாகவும் சிலர் இதற்குப் பொருள் கொள்வதுண்டு.