பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

வியந்து உளமாறப் பாராட்டி உவந்தார். தாமும் பிற புலவர்களும் சேர்ந்து அவரை எதிர்த்து வாதிட்டதெல்லாம் அவர் நினைவில் அலையலையாக எழுந்தன, கவிராயரின் சாபத்தினாலே மண் மாரியுற்று அழிந்த திருமலைராயன் பட்டினத்தையும் நினைத்துக் கொண்டார். தம்முடைய தவறான போக்கே அதற்கெல்லாம் காரணமாயிற்று என நினைத்து வருந்தினார். அவர் உள்ளத்தே காளமேகத்தின்பாற் கொண்டிருந்த பகைமையும் மறையலாயிற்று. புதியதொரு அன்பும் மதிப்பும் ஊற்றெடுக்கலாயிற்று. அவரைக் காண விரும்பி அவர் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்தார். ஆனால், அதற்குள் காளமேகம் புறப்பட்டு வேற்றுார் சென்று விட்டதறிந்தார், வருத்தமுடன் திரும்ப வேண்டியதாயிற்று. காலமும் சூழ்நிலையும் மனத்து எழுகின்ற ஆணவ நினைவுகளை எப்படியோ மாற்றிவிடுகின்றன. அந்த அதிசய சக்திகள், அதிமதுரத்தையும் காளமேகத்தைப் பாராட்டும் உயரிய நிலைக்குக் கொண்டு செலுத்தின.

மறைவும் துயரமும்

திருவாரூரிலிருந்து புறப்பட்டார் காளமேகம். பல ஊர்களுக்கும் சென்று வழிபட்டவராகத் திருவானைக்காவினை முடிவிற் சென்று சேர்ந்தனர். அங்கே மோகனாங்கியிடம் நடந்ததைக் கூறினார். அவளும் முத்தினை மறந்து அவருடைய செயலைப் போற்றிப் புகழ்ந்தாள். இருவருடைய வாழ்வும் இப்படியே சில காலம் இன்பமுடன் நடந்து கொண்டிருந்தது.

காளமேகத்திற்கு வயது முதிர்ச்சியின் தளர்வும், சோர்வும் தொத்திக் கொள்ளத் தொடங்கின. கவிமழை பொழிந்த காளமேகம், கவிச்சுவையால் கல்வி வல்லோரையும் தலை வணங்கிப் போற்றச் செய்த புலவர் பெருமான், 'வசை பாட காளமேகம்'என்ற இசையோடு வாழ்ந்த தமிழ் வீறு உடையார், ஒரு நாள் உடற்கூட்டை விட்டு நீங்கினர். மோகனாங்கி மட்டும் அன்று கதறிக் கண்ணிர் சொரியவில்லை, அவருடைய மோகனக் கவி இனிமையிலே திளைத்த தமிழகம், தமிழ்ப் புலவர் உலகம், முழுவதுமே கதறிக் கண்ணிர் பெருக்கியது.

அதிமதுரப் பாடல்

அதிமதுரக் கவியின் காதுகளிலும் இந்தத் துயரச் செய்தி சென்று விழுந்தது. வேதனைக் கடலிலே சிக்கி அவர் மனம் மீளாத் துயருற்றது. அப்போது அவர் பாடிய கவிதை மிகவும் உருக்கமானது.

வாச வயல் நந்தி வரதா திசையனைத்தும்
பூசு கவிகாள மேகமே-பூசுரனே
விண்தின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.