பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்-வெள்ளை அரியா சனத்தி லரசரோ டென்னைச் சரியா சனம்வைத்த தாய். (2)

வெள்ளைக் கலை உடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை நிற ஆடையை உடுத்தவளாகவும், வெண்ணிற அணிகளைப் பூண்டவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவினிலே வீற்றிருப்பவளான கலைவாணியே, வெள்ளை அரியாசனத்தில் - மாசற்ற சிம்மாசனத் திலே, அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய் - அரசராகிய இத் திருமலைராயனோடு என்னையும் சமநிலையிலே வீற்றிருக்கும் படியாக அருளிச் செய்த தாயாவாள். அவள் மலரடியைப் போற்றுகின்றேன்' என்பது கருத்து.

தம்மை மதித்து உபசரியாத மன்னவன் நாணுமாறு அவனுக்குச் சரியாகத் தம்மை அமரவைத்த கலைவாணியைத் துதிக்கிறார். கலைவாணியின் அருள் தமக்கு இருக்கிறதென்ற உண்மையை அரசனும் அந்த அவையினரும் அறியப் புலப் படுத்தியதும் ஆம் தன் மகன் துயருறக் காணப்பொறுக்காத தாய்மை உளத்தினையே கலைவாணியும் அவ்விடத்தே மேற்கொண்டாளாதாலால் அவளையும் 'தாய்’ என்றனர் 'அரசரோடு சரியாசனம் வைத்த’ என்றதால், பிற புலவர்களினுங் காட்டில் தம்மை உயர்த்திவைத்த சிறப்பையும் வியந்து நன்றி பாராட்டுகிறார் எனலாம்.

2. திருமலைராயன் பட்டினத்தே கூறிய செய்யுட்கள்

(இந்தப் பகுதியில், திருமலைராயனைக் காணச் சென்ற புலவர் பெருமான் பலருடனும் வாதிட்டுக் கூறிய செய்யுள்களும், அவனைப் புகழ்ந்து கூறியவையும், முடிவில் மனங்கொதித்து மண்மாரி பெய்யப் பாடியவையும் எல்லாம் காணப்பெறும். காளமேகம் திருமலைராயனைக் கண்டு பாடிப் பரிசில் பெற்று வரவே விரும்பினார். எனினும், சூழ்நிலை எப்படி எப்படியோ மாறியது. அவரை எப்படியாவது தலைகவிழச் செய்ய வேண்டும் என்று ஒரு புலவர் கூட்டமே முற்பட்டது. தம் கவி வன்மையினாலே அவர்களை வென்று சிறப்பு எய்தினார் காளமேகம்)