பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

91


நலத்துக்குமட்டுமல்ல-சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. வாழ்க்கையில் துணிவை-தன்னம்பிக்கையைப் பெற உங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்குமாறு வேண்டுகிறேன்.

இனி, கடவுளைப் பற்றிய எண்ணம் தொழிலாளர்களுக்கு எங்கும் எப்பொழுதும் வேண்டும். வேலைக்குச் செல்வதால் கடவுளை வணங்க நேரமற்ற நிலை உங்களுக்கு உண்டென்பதை நான் உணராமலில்லை. தேயிலைக் கொழுந்தைக் கொய்யும் பொழுதும், கூடையில் போடும் பொழுதும் கடவுளை நினைக்கலாம், வணங்கலாம். கூடையில் கொழுந்தைப் போடும்பொழுது, ‘முருகா! முருகா!’ என்று சொல்லிப் போட்டால் அது முருகனுக்கு லட்சார்ச்சனையாகிவிடும். மலையின் உச்சியிலே கொழுந்து கொய்யும் உங்களுக்கு ஏறுமயிலேறி மலைதோறும் மகிழ்வுடன் உலாவரும் முருகக்கடவுளின் கருணைகிட்டும்.


16. [1]தொழிலாளர் தினச் சிந்தனைகள்

ந்த உலகம் உழைப்பால் ஆனது; உழைப்பால் வளர்வது. கடவுள் கூட ஒரு தொழிலாளிதான். படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை இறைவன் செய்கிறான். அண்டமெலாம் படைத்து, படைத்த அண்டங்களையெல்லாம் படைத்த வண்ணம் காக்கின்றான். உழைப்பே உலகின் உயிர்ப்பு, உழைப்பே உலகின் இயக்கம். உழைப்பே உலகத்தின் வாழ்வு.

இந்த உலகம் தோன்றிய நாள் தொடங்கி, உழைப்பு உலகத்தை வளர்த்து வந்திருக்கிறது. எண்ணற்ற தொழிலாளர்கள் இந்த உலகை வளர்ப்பதில்-மானுடத்தை வளர்ப்பதில்


  1. மதுரை வானொலி.