பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தில்லை. பணத்தாசையும் சுவை நுகர் ஆசையும் பேயாட்டம் போடுகின்றன. இயற்கையை வளர்த்து வளப்படுத்தி வாழத் தெரியாமல் மலைவளங்களையும் மரங்களையும் அழிக்கின்றனர். "காடு கெட ஆடு" - என்பர். வெள்ளாடு, அண்ணாந்து வளரும் மரங்களையே கடிக்கும். கண்டபடி ஆடுமாடுகளை மேய விடுவது பசுமையைக் கெடுக்கும் ஆடும் மாடும் வீட்டுப் பிராணிகள்! வீட்டிலேயே சுட்டித் தீவனம் போட்டுத்தான் அவற்றை வளர்க்க வேண்டும்! நிலத்தின் வளமும் மரங்களும் காப்பாற்றப் பட்டாலே கிராமங்கள் வளரும்; அவ்வழி தொழில் பெருகும்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் மட்டும் புன்செய் நிலம் தரிசு ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ஹெக்டேர் இருக்கிறது. வறட்சியால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. நிலத்தடிநீர் உண்டு. மழையும் கூடத் தேவையான அளவுக்குப் பெய்கிறது. ஆனால், வறண்ட நிலங்கள் குடித்து விடுகின்றன. நீர்ப்புரளி நிலங்களில் தாவரங்கள், மரங்கள் பயிரிட்டால் கண்மாய்களுக்குத் தண்ணீர் வரத்துக் குறையும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. தாவரங்களும் மரங்களும் மழைத்தண்ணீரில் பத்து விழுக்காடு கூடக் குடிக்கா. மீதித் தண்ணீரை வேர்கள் வழி, நிலத்தடி நீராக மாற்றி, ஏரிகளுக்கும் கண்மாய்களுக்கும் கிணறுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். காற்றில் ஈரப்பசையைக் காப்பதன் மூலம் வறட்சியைத் துரத்தும்; வான்மழையை வரவழைக்கும். ஆதலால், எங்கும் பசுமை என்பது கிராமப்புற வளர்ச்சியின் முதல் நோக்கம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் ஏராளமான நிலம் புன்செய்த் தரிசாகக் கிடக்கிறது. இவைகளில் ஒரு பகுதி மண் அரிப்புக்கு இரையாகிக் கெட்டுப் போய்விட்டது. இந்த நிலங்களில் ஆமணக்கு சாகுபடி செய்யலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் திண்டிவனம் எண்ணெய் வித்து ஆய்வு மையமும்