பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. நாம் காணும் பெரியார் (பக்கம் 186) உலகத்தலைவர் பெரியார் (பக்கம் 195) என்னும் இரு கட்டுரைகள் அடிகளாரது இந்நூலில் உள.

இந்நூலில் மூன்றாம் பிரிவு சமுதாயம் என்ற தலைப்பில் முதற்கட்டுரை, கட்டுரை எண் 47, “கடவுளைப் போற்று! மனிதனை நினை!" என்பது (பக்கம் 298-377). இப்பெருங் கட்டுரை, 80 பக்கக் கட்டுரை, ஒரு தனி நூலாகவே வெளிவந்தது. "கடவுளை மற! மனிதனை நினை!” என்றார் பெரியார் ஈ.வே.ரா. கடவுளின் பெயரால் நடக்கும் சில பல அக்கிரமங்கள் மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்குப் பெரும் இடையூறாக இருப்பதைக் கண்ட பெரியார் ஒரு வயிற்றெரிச்சலில் அப்படிச் சொன்னார். அடிகளார் அதனை அப்படியே சிறிது மாற்றினார். “கடவுளைப் போற்று! மனிதனை நினை!" என்றார். மனிதனை நினைக்கவேண்டியது இன்றியமையாதது, அதற்காக ஏன் கடவுளை மறக்கவேண்டும், மனிதர்களை நினைப்போம், கடவுளைப் போற்றுவோம் என்றார் அடிகளார்.

அடிகளாரது நூல்கள் சிறியனவும் பெரியனவும் ஆக 50-க்கு மேற்பட்டவை. அவற்றுள் நான்கு நூல்கள் நமக்கு மிகவும் பிடித்தமானவை.

1. நமதுநிலையில் சமயம் சமுதாயம்
2. ஆலயங்கள் சமுதாய மையங்கள்
3. சைவசித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

4. கடவுளைப் போற்று! மனிதனை நினை!

முதல் நூல் அடிகளார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவு. இது சாதாரண ஒரு பொழிவு அன்று, நூல் அன்று. இது ஒரு வெள்ளை அறிக்கை (ஒயிட் பேப்பர் White Paper) சட்டமுன்வடிவு, சட்டமாக வரவேண்டியது.என்பது எம் கருத்து. “குடிகளைத் தழுவிய கோயில், கோயிலைத் தழுவிய குடிகள்" என்றொரு புதுமொழியை - பொன்மொழியை - அடிகளார் நாட்டுக்கு வழங்கினார். மாநில அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஓர் அரசுத் துறையாக இருப்பதை மாற்றி, ஒரு தன்னாட்சி வாரியமாக அதை ஆக்கி, அடிகளாரை அதன் தலைவராக நியமித்திருந்தால் நாடு எவ்வளவோ நலம் பெற்றிருக்கும். அடிகளாருக்கு ஆலோசனைப் பதவிகளை அளித்தது போதாது. அதிகாரப் பதவிகளைத்