பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

187


கழனியில் புல்லும் முளைப்பதுபோல் மனித சமுதாய எண்ணக் கருத்துக் குவியல்களில் நல்லனவும் தலைகாட்டும்; அல்லனவும் தலைகாட்டும். இது ஒரு நியதி. அவ்வப்பொழுது மனித சமுதாயத்தைச் சமூகத்துறையாகவோ, அரசியல் துறையாகவோ சமயத் துறையாகவோ பிரித்து வைத்து, தம்வயப்படுத்தி, அழைத்துச் செல்லும் தலைவர்கள் தோன்றியுள்ளனர். எப்பொழுதோ ஆயிரம் ஆண்டுகளுக்கொருதரம் மனித இனத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் பிரிக்காமல் ஒரு குலமாக்கி அழைத்துச் செல்லும் உத்தமத் தலைவர்களும் தோன்றினர். பொதுவாக மனித இனத்திற்குப் பிரிவு தீயது. அது சாதியின் பாற்பட்ட பிரிவாயினும் சரி, அல்லது எத்துறையின் பாற்பட்ட பிரிவாயினும் சரி, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பழந்தமிழர் கொள்கை மீண்டும் சமுதாயத்தில் இடம் பெறல் வேண்டும். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று உயர்ந்தோர் காட்டிய உறுதி நெறி உரம் பெறுதல் வேண்டும். அண்மையில்தான் மேற்றிசை நாட்டார் ஓருலகக் கருத்தைக் கொண்டனர். ஆனால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் ஓருலகக் கருத்தைக் கொண்டு வாழ்ந்தனர்.

இங்ஙனம் “ஒருகுல வளர்ச்சி” வளர்ந்து வளம் பெறல் வேண்டுமானால் எப்படியோ நம்மிடத்தில் நுழைந்துவிட்ட சாதி உணர்ச்சி மறைந்தொழியவேண்டும்; மனித இனத்தைத் தன்னலத் துறையில் அழைத்துச் செல்லுகின்ற சிறுமதி படைத்த தீய உணர்ச்சி சாதி என்ற பொல்லா எண்ணத்திற்கு உரித்தாகும். சாதியை ஒழித்து சமரச சமதர்ம சமுதாயம் காண்பதே பன்னெடு நாளைய தமிழ்ப் பெரியோர்களின் எண்ணம். அத்தகைய பெரியோர்களின் பரம்பரையில் நமது பெரியார் அவர்களும் வந்தவர். அவருடைய கடந்தகால வாழ்நாட்களில், கண்ணியமாக சாதியை எதிர்த்துச் சாடிய போராட்டங்களும், அப்போராட்டங்களால் அவர் அடைந்த கல்லடியும் சொல்லடியும் கணக்கிலடங்கா.