பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவ்வமயம் சாதி முறையால் தம்மை வயப்படுத்தி வாழ்வுபெற்ற ஒரு சிலர் பெரியார் மீது கடுஞ்சினம் கொண்டு கனல் கக்கினர். பொய்யின் அடிப்படையில் தன்னல நோக்கோடு எழும் வெகுளி என்னதான் செய்யும்? இன்று தமிழகத்தில் சாதிச் சழக்குகள் சருகெனக் காய்ந்து, உதிர்ந்து வருகின்றன. விரைவில் சாதி என்ற சொல் தமிழகத்தைப் பொறுத்தவரையிலே அகராதிச் சொல்லாகவே மாறிவிடும் காலம்வரும். அத்தகைய மெச்சத்தகுந்த பெரும் பணியில் ஈடுபட்டுள்ள பெரியார் அவர்கள் வாழ்க!

சமயநெறி

மனித இனத்தை நல்லன எண்ணத் தூண்ட நல்லாற்றலில் செயல்படச் செய்வது சமயநெறி. சமய நெறியின் அடிப்படைத் தத்துவமே இதுதான். காலப்போக்கில், எப்படி எக்காரணம் பற்றி என்று சொல்ல முடியாமல் சமுதாயத் துறையில் நுழைந்தது போலவே சமயத் துறையிலும் சாதி உணர்ச்சியும் ஏற்றத் தாழ்வு மனப்பான்மைகளும், சாத்திரப் புராணங்களின் பெயரால் நுழைக்கப்பட்டன. பழந்தமிழ் நூல்களும், தமிழ்த் திருமுறைகளும் இவற்றை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. சமயம் என்றுமே வாழும். மனித இனத்தை வளப்படுத்தவே இருந்தது- இருந்து கொண்டிருக்கிறது-இருக்கவும் வேண்டும். ஆனால் மக்கள் வாழ்விலே மலர்ந்து வளரவேண்டிய சமயநெறி, காலப்போக்கில் மனித இனத்தை விட்டுப் பையப் பைய அகன்று கோயிலுக்குள்ளே சிறைபுகுந்து கொண்டது. ஆதலால் மனித இனம் நயத்தக்க நாகரிகத்துடன் வாழ முடியாமற் போயிற்று. இங்ஙனம் சொல்வதினால் கோயில்கள் சமயத்தைக் கெடுத்துவிட்டன வென்றோ, கோயில்கள் கூடாது என்றோ யாரும் விரைவில் முடிவுக்கு வரக்கூடாது. எடுத்துக்காட்டாக இருள் திசையைக் கிழிக்க, ஒளிமிக்க விளக்கு வேண்டும்.