பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அதாவது, ஓர் இனம் இன்னோர் இனத்தினுடைய உரிமையில் தலையிடாமல், அந்த இனத்தினுடைய தகுதியையும், சிறப்பையும், இனமானத்தையும் காத்துக்கொள்ள ஒப்புக் கொள்ளுமானால், “இனவெறியைத்” தடுத்து நிறுத்த முடியும். ஓர் இனம், ஓர் இனத்தின் உரிமைகளில் தலையிடும் போதோ, அல்லது ஓர் இனம் ஓர் இனத்தினுடைய பெருமைகளைக் குறைக்க முற்படும்பொழுதோ, இனவெறிக் கொள்கை தோன்றுகிறது. இந்த மாதிரி, சில சமயங்களில் பெரியார் அவர்களுடைய பேச்சு அல்லது எழுத்துக்களில், இன வெறுப்புக் கொள்கை இருப்பது போலத் தோன்றுகின்றது. ஆனாலும், தம்முடைய இன நலத்திற்கு இன்னோர் இனத்தினால் கேடுவராதபோது, தம்முடைய இனவெறுப்புக் கொள்கையைக் கைவிட்டுவிடுவாரென்றே நம்புகிறோம்.

சாதி ஒழிப்பாளர்

தலைவர் பெரியார் அவர்கள், தம்முடைய இனநலக் கொள்கையின் அடிப்படையாகச் சில துணைக் கொள்கைகளையும் வரையறுத்துக் கொண்டிருக்கிறார். அவைகளுள், தலையாயது சாதி ஒழிப்புக்கொள்கை. தமிழினத்திற்குச் சாதிக் கொள்கை உடன்பாடு உடையதல்ல. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று புலவர்கள் போற்றும் புறநானூறு பேசுகின்றது. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று உயர்ந்த மாமூலர் உரை பேசுகின்றது. தமிழகத்தின் தவவிளக்காக, ஞானச் சுடராகத் திகழ்ந்த திருநாவுக்கரசு சுவாமிகளும் “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்று, சாதி வெறி பிடித்தவர்களை நோக்கி-அச்சாதி வெறிக்குச் சாத்திரங்களின் ஆதாரங்களைக் காட்டுபவர்களை நோக்கிச் சாடுகிறார். இங்கனம் தமிழ்ப் பெரியோர்கள் வாழையடி வாழையாக சாதி வெறியைச் சாடி வந்தபோதிலும், சாதிகள் தொலைந்தபாடில்லை. அப்பப்பா! சாதிகள் சல்லி வேர்களைப் போலத் தழைக்