பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

213


கொண்ட பொது வாழ்வில், உள்ளத் துறவோடு வாழ்ந்தார். பொன்னையும் பொருளையும் சேர்த்தாரில்லை. கட்சியைச் சார்ந்து நின்றார். ஜன சக்தியைப் போற்றிப் பரவினார். தன் சக்தியை எல்லாம் ஜன சக்தியின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்குமே அர்ப்பணித்தார். இதைவிடப் பூரணத்துவம் எங்கே இருக்கிறது? நம்மோடு பழகியதனால், வழக்கம்போல ஜீவாவாகப் பார்த்தோம். ஆனாலும், அவர் ஒரு மார்க்சீய மெஞ்ஞானி-வாழ்க அவர்புகழ்! வளர்க அவர் தொடங்கிய தொண்டு!


40. [1]நீங்கா நினைவு

ளிவிளக்கு அணைந்துவிட்டது. இருள் சூழ்ந்து கவிந்து கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் கூறியது போல, “நடவாதது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது” “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்”லென இளங்கோ அடிகள் கூறினார். அதே அடிகள் இன்று அண்ணாவை இழந்து அல்லலுறும் தமிழினத்திற்கும் பொருந்தும். அறிஞர் அண்ணா சிறந்தவர்; பிறவிச் சிந்தனையாளர்; அதே பொழுதில் கனிந்த அன்பினர்; தெள்ளுதமிழ் நெஞ்சினர்; தேன் தமிழ் நாவினர்; பீடு சேர் நடையினர்; பெருமைசேர் மாண்பினர்; எழுத்துலகின் ஏந்தல்; நானிலம் போற்றும் நாவலர் கண்ணியத்தின் வடிவினர்; தமிழ்த்தாயின் தவப் புதல்வர்; தமிழினத்தின் தானைத் தலைவர்; தன்மானமும்-இனமானமும் காத்த நயத்தக்க நாகரிகப் பண்பினர்; அன்னை தமிழை அரியணை ஏற்றிய தாளாளர்; தமிழ்நாடு பெற்றுத் தந்த தன்னேரில்லாத் தலைவர் தாயிற் சிறந்த கனிவுடையவர்; தடந்தோளர்-இந்தியை இன்பத் தமிழகத்திற்கு அப்பால் நிறுத்திவைத்த தடந்தோளர்; பெரியோரை


  1. பொங்கல் பரிசு

கு.XIII.15.