பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்வும், அறிவும் நிலைத்த பயனைத் தரும்; ஈடும் இணையும் இன்றி வளரும்.

தமிழுக்கு அறிவியல் புதிதன்று; அறிவியலுக்குத் தமிழ் புதிது அல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே தமிழில் அறிவியற் கருத்துக்கள் நடைபயின்றதுண்டு, என்று முன் தென்தமிழ் இயம்பி இசைகொண்ட கம்பன் அறிவியல் துறையிலும் கால்கோள் விழாச் செய்திருக்கிறான். கம்பன், இராவணன் வானவீதி வழிச் சென்றதாகக் கவிதை செய்துள்ளான். அக்கருத்தைப் படித்த தமிழ்ப் புலவர்கள் அக்கவிதையில் உள்ள எதுகை மோனைகளை மாத்திரம் எண்ணிப்பார்த்து ரசிப்பதில் ஆழ்ந்து மெய்மறந்து போயினர். பக்தர்களோ இராவணன் வானவீதியில் வலம் வந்தமை அவனுடைய முயற்சியின் திறமையாலன்று. கடவுளின் வரம் பெற்றதினாலேயே என்று கூறி அச்செயலை அற்புதமாக்கி மனித இனத்தின் தன்னம்பிக்கையைச் சாகடித்தார்கள்.

இந்தத் தலைமுறையில் வந்த பகுத்தறிவுலகமும் கம்பன் சொன்ன கருத்தை ஆராய்வதற்கு முன்வராமல் கண்மூடித்தனமாகக் கம்பன் கூறியவையெல்லாம் பொய்யென்று கூறி எரிக்கத் தலைப்பட்டது. ஐயோ, பாவம்! கம்பனுக்குப்பின் இப்படிப்பட்ட தலைமுறையா வரவேண்டும். இந்த வழி கம்பனுக்கு மட்டுமன்று. திருத்தக்கதேவருக்கும் இதே கதிதான். அணுத் தத்துவத்தையும், அண்ட வெளித் தத்துவத்தையும் ஆராய்ந்து பேசிய மாணிக்கவாசகருக்கும் இதேகதிதான். மேற்காணும் குறிப்புக்களை மனத்தில் வைத்துக் கொண்டு சிந்ததித்தால் தமிழிலும் அறிவியலுண்டு என்ற முடிவுக்கே வரவேண்டி வரும். அக்கருத்துக்களைத் தொடர்ந்து சிந்தித்துச் செழுமைப் படுத்தாத காரணத்தால், அறிவியல் துறையில் பின் தங்கிப் போனோம். சிந்தனை மனித குலத்தின் பொதுஉடைமை. இன்ன சிந்தனை இன்ன மொழியில்தான் வரும் என்று வரையறுத்துச் சொல்வது அறியாமையென்றே கருதுகின்றோம். எத்துறையில் எந்த இனம் முயன்று சிந்திக்