பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

237


வேதனை பிறக்கிறது. நமது முன்னோர்கள் காலத்திற்கேற்ற தொண்டுகளைச் செய்து தமிழை வளர்த்து வந்துள்ளார்கள். ஆனால் நாமோ நம்முடைய தலைமுறையில் ஒன்றும் செய்யவில்லை. அண்மைக் காலக் கவிஞன் ஒருவன் தமிழன்னையின் திருமேனியில் சில பல அணிகள் இருப்பதாகக் கவிதை செய்துள்ளான். அன்னை மீதுள்ள அணிகலன்கள் அனைத்தும் நம்முடைய பாட்டன் காலத்திலும், முப்பாட்டன் காலத்திலும் செய்யப்பெற்றவை. நம்முடைய தலைமுறையில் என்ன செய்திருக்கிறோம்? நிறையக் கதைகள் எழுதிக் குவித்திருக்கிறோம் என்று பெருமை பேசிக் கொள்ளலாம் சிலர், அவர்கள் நிலை இரங்கத்தக்கது. உலகில் மற்ற இனங்களோடு நாமும் பெருமை பற்றி வாழவேண்டுமென்று விரும்பினால், தமிழில் வாழ்க்கைக்குரிய அறிவியல், பொருளியல், தொழிலியல், உளவியல், சமூகவியல், ஆய அத்தனைத் துறைக் கலைகளையும் வளர்க்க வேண்டும். இதற்குத் தாய்மொழி, பயிற்சி மொழியாக இருப்பது பெரிதும் உதவிசெய்யும். ஆக எத் துறையில் பார்த்தாலும் தாய்மொழியே பயிற்சி மொழி என்று சொல்லுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாதென்றிருக்கிறோம். தமிழினம் சிந்தனையாலும், செல்வத்தினாலும் செழிக்கத் தாய்மொழியைப் பயிற்சி மொழியாகக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவோமாக, அதற்கேற்றாற் போல் நம்முடைய தமிழ்நாட்டு அரசினர் எங்கும், எப்பொழுதும், என்றென்றும் தமிழே இடம்பெற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருப்பதற்கு நம்முடைய நன்றி கலந்த ஆதரவைத் தருவோம்.

3. தமிழே பயிற்சி மொழி

தாய்மொழி மக்களுக்கு விழி போன்றது. தாய் மொழியின் வழியேதான் ஓர் இனம் வளர்ச்சிபெற முடியும். தமிழர்கள் நீடித்து நல்வாழ்வு பெற முடியாமற் போனமைக்