பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

243


படித்தால் வேலை கிடைக்குமா?' என்று கேட்கின்ற நிலையில் இருக்கிறார்கள். ஆங்கிலக் கல்வி, வெள்ளையன் வைத்துப் போன அடிமை முத்திரை, இன்னும், அந்த அடிமை முத்திரையையே சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதலாமா? உலகத்தின் முன்னே நம்மை ஒரு தனிப்பெரும் சத்தியாக மனிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை நமது இளைஞர்களுக்கு வேண்டும். தன்னியல்பாக பெருமித உணர்வோடு வாழ்வேன் என்ற உணர்ச்சி இளைஞர்களுக்கு வரவேண்டும்.

எண்ணுவதற்கு, சிந்திப்பதற்கு, ரசிப்பதற்கு அழுவதற்கு, சிரிப்பதற்கு, உணர்ச்சியைப் பெறுவதற்கு உரிய மொழி தாய் மொழிதான்; நான், ஆங்கிலம் படித்த பேராசிரியர்களைக் கேட்கிறேன். அவர்களால் ஆங்கிலத்தில் எண்ண - சிந்திக்க - ரசிக்க - அழ - சிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நடப்பதற்குரிய காலை இழந்தாலும் இழக்கலாம்; நமக்கு எண்ண, சிந்திக்க, ரசிக்க, அழ, சிரிக்கப் பயன்படுகின்ற தாய்மொழியை இழக்க முடியாது.

தேசிய ஒருமைப்பாடு மிக மிக இன்றியமையாதது. எனினும், இந்தியா ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழன் தனது தாய்மொழியை இழக்க வேண்டுமா? இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால், சுதந்திர சாசனத்தில் தேசிய மொழிகள் என்று அறிவிக்கப் பெற்றுள்ள 14 மொழிகளையும் காப்பாற்ற வேண்டும்-பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லையானால், இந்த அடிப்படை உரிமைகளை மறுக்கின்றவர்களே தேசிய ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு செய்தவர்கள் ஆவார்கள்.

தாய்மொழி ஆயிரம் ஆண்டுக் காலப் பயிர் நமது தாய் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியம் உள்ள மொழி, முற்போக்குக் கருத்துக்கள், எண்ணங்கள் யாவுடனும் வளர்ந்த மூத்த மொழி.