பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

255


கூறியுள்ளார்கள். மாநில ஆட்சியில் இந்தி வருவதற்கு இடம் ஏது? சட்டப்படியும் இல்லை. நியாயப்படியும் இல்லை. அதனால், அவர்களின் வாதம் எவ்வளவு தூரம் பொருந்தும் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆக, எப்படியோ தமிழ் நாட்டில் தமிழ் எல்லா இடங்களிலும் இடம் பெறுதற்குரிய முயற்சி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது - தட்டிக் கழிக்கப்படுகிறது என்றே நாம் கருதுகிறோம். தமிழ்ப் பெருங்குடி மக்களும் தமிழறிஞர்களும் இது குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்!

9. தீயணைக்க வாரீர்!

தமிழகம் முழுதும் இந்தித் திணிப்பை எதிர்த்து இளந்தலைமுறையினர் கிளர்ச்சி செய்கின்றனர். கிளர்ச்சித் தீ பற்றி எரிகிறது - பரவுகிறது. உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது; இளந் தலைமுறையைச் சார்ந்தவர்கள் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி உயிர் துறந்திருக்கிறார்கள். இச்செய்தி வேதனையைத் தருகிறது - விழிநீர் பெருக்குகிறது! மொழிக் கிளர்ச்சியில் உயிர் துறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய நமது பிரார்த்தனை!

மொழி வழிப்பட்ட உணர்ச்சிகளை, கவனமாகக் கையாளாவிடில் மனித சமுதாயம் ஒருமைப்பாடற்றதாகி உருக்குலைந்து விடும். உணர்ச்சி தோன்றுவதியற்கை, ஆனால் அவ்வுணர்ச்சியை ஒழுங்குபடுத்துவதே அறிவுடைமை - மனிதனின் விழுமிய கடமை. இப்பொழுது இங்கு மிகுந்து நிற்பது மொழியுணர்ச்சியா மொழியறிவா என்பது ஆய்வுக்குரியது. மொழியுணர்ச்சியின் பாற்பட்டு ஆதிக்க வெறி கொள்வது மனித இயல் ஒழுக்கத்திற்கு முரண்பட்டது. இத்தவற்றை யார் செய்தாலும் தவறு தவறுதான்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தைந்தில் மத்திய ஆட்சியின் அலுவலக மொழியாக இந்தி வரும் என்பது